பக்கம் எண் :

சொல்வேர் காண்வழிகள் 61

     வள்-வட்டை-வடை-வ. வடா. வட்டமானது வடை. இதுவே
     உண்மையான பொருள்.

3. குறிக்கோட் சொல்லியல்(Tendentious Etymology)

     எ-கா: வெறு-வெறுக்கை(வெறுக்கப்படத்தக்கது) = செல்வம். வ. முக்தா
(சிப்பியினின்று விடுதலை பெற்றது) - த. முத்தம்-முத்து. இக் கூற்றுகள்
சரியல்ல. இவற்றுள் முன்னது துறவியர் கூற்று; பின்னது வடவர் கூற்று.
வெறுத்தல் = செறிதல், நிறைதல். வெறுக்கை = திரண்ட செல்வம்.

     "விறப்பும் உறப்பும் வெறிப்புஞ் செறிவே." (தொல். சொல். 830)

     முத்து = உருண்டையானது. முத்து-முத்தம் - வ. முக்தா. இவையே
     உண்மையான பொருள்.

4. அடிப்பட்ட சொல்லியல் (Popular Etymology)

     எ-கா: உண்மை = உள்ளத்தொடு(கருத்தொடு) பொருந்தியது.
வாய்மை = வாயொடு (சொல்லொடு) பொருந்தியது. மெய்ம்மை = உடம்பொடு
(செயலொடு) பொருந்தியது. இம் முறைப் பொருட்கூற்றுச் சரியன்று.
உண்மை = உள்ளது, வாய்மை = தேற்றமாய் வாய்ப்பது(நிறைவேறுவது).
மெய்ம்மை = உடம்புபோற் கண்கூடானது (substantiality). இங்ஙனம்
கொள்வதே பொருத்தமானது.

5. நகையாட்டுச் சொல்லியல்(Playful Etymology)

     எ-கா: தோசை = சுடும்போது இருமுறை சை யென்ற ஓசை கேட்பது.
இஃது ஒரு வேடிக்கைக் கூற்று. தோய்தல் = மாப்புளித்தல். தோய்-தோயை-
தோசை என்பதே பொருத்தம். தோசையைத் தோயப்பம் என்னும் வழக்கை
நோக்குக.

6. பொருந்தப் புகல்வுச் சொல்லியல்(Plausible Etymology)

     எ-கா: பெருச்சாளி = பெரிய பணப்பை போன்றது. இது காளமேகர்
கூற்று. பெருத்த எலி = பெருச்சாளி என்பதே உண்மையோடு பொருந்தியது.

7. அறிவாரவாரச் சொல்லியல்(Pedantic Etymology)

     கீழ் = ஞாலம் உருளும்போது கிழக்குத் திசையிற் கீழ்நோக்கிச்
செல்வது; மேல் = அது அங்ஙனம் உருளும்போது மேற்குத் திசையில்
மேனோக்கி எழுவது. இது கணியர் திறம்படக் கூறுவது. கீழ் = தமிழ்
நிலப்பரப்புக் கீழ்க்கோடியில் கடலாற் பள்ளமாயிருப்பது. மேல் = அது
மேற்கோடியில் மலைத்தொடரால் மேடாயிருப்பது. இது கால்டுவெலார் கூற்று.
இதுவே உண்மையானது.

     இனி, உண்மைச் சொல்லியல் நெறிமுறைகளும் சொல்வேர் காணும்
வழிவகைகளும் வருமாறு: