பக்கம் எண் :

62மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

1. இலக்கணஅறிவுடைமை

     ஒவ்வொரு பகுசொற்கும், முதனிலை, ஈறு, இடைநிலை, சாரியை,
புணர்ச்சி, திரிபு ஆகிய அறுவகை யுறுப்புகளுள் அமைந்துள்ளவரை
பகுத்தறியத் தெரிதல் வேண்டும்.

2. மொழிநூலறிவும் மொழியாராய்ச்சியும்

     வரலாற்று மொழிநூல்(Philology) அறிவும் சொந்த மொழி
யாராய்ச்சியும் அடுத்து வேண்டப்பெறும் இன்றியமையாத் தகுதியாகும்.

3. சொல்லிய லறிவுப்பேறு

     கீற்று(Skeat) எழுதியுள்ள ஆங்கிலச் சொல்லியல் நெறிமுறை களையும்
(Principles of English Etymology - 2 Vols), அவரும் சேம்பரரும்
(Chambers) தொகுத்த ஆங்கிலச் சொல்லியல்(Etymological) அகர
முதலிகளையும், கற்றுத் தெளிதல் வேண்டும்.

4. அயன்மொழி யறிவு

     மலையாளம் தெலுங்கு போன்ற அகப்புற மொழிகளையும், மராட்டி
இந்தி போன்ற புறமொழிகளையும், ஆங்கிலம் இலத்தீனம் கிரேக்கம்
போன்ற புறப்புறமொழிகளையும் ஓரளவு கற்றலும் வேண்டும்.
தன்சொற்போல் தமிழில் வந்து வழங்கும் வேற்றுச் சொல்லையும், வேற்றுச்
சொற்போல் பிறமொழிச் சென்று வழங்கும் தன் சொல்லையும் பிரித்தறிதற்கு
அயன்மொழியறிவு இன்றியமையாததாம்.

5. பெரும்பால் தமிழ்ச்சொற் பொருளறிவு

     இருவகை வழக்கிலுமுள்ள தமிழ்ச் சொற்களும் பெரும்பாலான வற்றின்
பொருளை அறிந்திருத்தல் வேண்டும்.

6. தமிழ் ஒலியியல்பறிதல்

     தமிழ் முதன்முதல் குமரிநாட்டில் தோன்றிய மெல்லொலி
மொழியாதலின், வல்லொலி மிக்க திராவிடமொழிகளையும் ஆரிய
மொழிகளையும் அடிப்படையாக வைத்தாராயின், உண்மை காண முடியாது.
தமிழின் உண்மையான ஒலியியல்பையும் சொற்றூய்மையையும் அறிய
விரும்புவார், இற்றைத் தென்பாண்டி நாடாகிய நெல்லை வட்டார நாட்டுப்புற
உலக வழக்கை அறிதல் இன்றியமையாததாம். தமிழின் மெல்லொலிகளே
திராவிடத்திலும் ஆரியத்திலும் வல்லொலிகளாய்த் திரிந்துள்ளன.

     எ-கா :செய் - ceyu (தெ.), கும்பு - gumpu(தெ.), கல் - khal(பிரா.),            பாகம் - bhaga (வ.).