7. எழுத்துகளின் திரிபுகளை யறிதல் சொல்லாக்க முறையில், ஒவ்வோரெழுத்தும் சில்வேறெழுத்தும் பல்வேறெழுத்துமாகத் திரிகின்றது. அத் திரிபுகளையெல்லாம் அறியாக் கால் பல சொல்வேர்களைக் காண்டல் அரிதாம். எ-கா: ள - ஃ : எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு. ள - க : உளி - உகிர், தளை - தகை. ள - ச : உளி - உசி - ஊசி - வ. சூசி. ள - ட : நளி - நடி, மகள் - மகடூஉ. ள - ண : பெள் - பெண், வள் - வளர் - வணர். ள - ய : தொள் - தொய், மாள் - மாய். ள - ர : நீள் - நீர், வள் - வார். ள - ல : கொள் - கொல். ள - ழ : காள் - காழ், துளசி - துழாய். ள - ற : தெள் - தெறு - தெற்று, வெள் - வெறு. ள - ன :முளை - முனை, வளை - வனை. 8. சொற்றிரிபறிதல் எ-கா:அரம்(சிவப்பு)-அரத்தம்(சிவப்பு)-அரத்தி-அத்தி = சிவந்த பழம், அப் பழமரம். அகல்-ஆல் = அகன்று படரும் மரம். கோநாய்-ஓநாய். தமப்பன்-தகப்பன். தகு + அப்பன் என்று பிரிப்பது தவறாம். 9. சொற்களின் திருந்திய வடிவறிதல் இடைகழி-டேழி(கொச்சை)-ரேழி(கொச்சை). மணித்தக்காளி - மணத்தக்காளி(கொச்சை). டேழி, ரேழி, மணத்தக்காளி என்னும் கொச்சை வடிகளினின்று, வேரையும் வேர்ப்பொருளையும் அறியமுடியாது. 10. பலபொரு ளொருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல் சில சொற்கள் வெவ்வேறு பொருள்கொண்ட வெவ்வேறு வேரி னின்று பிறந்து ஒரு வடிவுகொண்டு நிற்கும். அவற்றை வேறுபடுத்தியறிதல் வேண்டும். எ-கா: மணி1 = கரியது. மல் - மால் = கருமை, முகில், கரிய திருமால். மால் - மாரி = முகில், மழை, கரிய காளி. மால் - மா = கருமை. மா - மாயோன் = கரிய திருமால். மாயோள் = கரிய காளி. மல்-மள்-மறு = களங்கம், கரும்புள்ளி. |