"ஆரிருள் நடுநாள் வருதி சாரல் நாட'"(குறுந். 141) பரு - பெரு, சத்தான் - செத்தான், அல்லி - எல்லி (இரவு) முதலிய திரிபுகளில் அகரம் எகரமாகத் திரிவதால், அதன் நீள வடிவமான ஆகாரம் ஏகாரமாகத் திரிவதும் இயல்பாம். எ-கா: சாறு - சேறு (திருவிழா) சார் - சேர் சாரல் - சேரல் சாண் - சேண் (கன்னடம்) சாரல் நாடனைச் சாரல் என்றது ஓர் இடவாகு பெயர். அது முன்னரே வழக்கிறந்து, பின்பு அதன் திரிபான சேரல் என்னும் வடிவமே வழங்கலாயிற்று, எனக் கொள்க. லகரமெய் யீறு சில சொற்களில் னகரமெய் யீறாகத் திரிதல் இயல்பு. எ-கா: மேல - மேன வெல் - வென் (வெற்றி) கல் - கன் (தோண்டு) ஆல் - ஆன் (3ஆம் வேற்றுமையுருபு). இம் முறைப்படி, சேரல் என்பது சேரன் எனத் திரிந்தது. சேரல் என்பது அன்னீறு பெறின் சேரலன் என்றாகும். அது வடமொழியிற் கேரல(ன்), கேரள(ன்) எனத் திரியும். கேரலன் என்பது கேரன், கேலன் எனத் தொகும். இவற்றுள், கேரன் என்பதைக் கால்டுவெல் அறிஞரும் கேலன் என்பதை ரா. இராகவையங்காரும் சேரன் என்னும் பெயர்க்கு மூலமாகக் கொண்டனர். இது தலைகாலாகக் கொண்ட தடுமாற்றம். இனி, சார்தல் என்பதற்குச் சாய்தல் என்றும், சார் என்பதற்குத் தாழ் வாரம் என்றும் பொருளிருத்தலால், மலைச்சாரலை அல்லது அடி வாரத்தைக் குறிக்கும் சார் என்னும் சொல்லே சேர் எனத் திரிந்து, வள்ளல் என்பது போல் அல்லீறு பெற்றுச் சேரல் என்றாயது எனக் கொள்ளலும் ஒன்று. இதுகாறுங் கூறியவற்றால், வரலாற்றடிப்படையிலே மொழிகளை ஆய்தல் வேண்டுமென்று, ஒருவழிப்போக்கான ககர சகர மாற்றமன்றி இருவரிப் போக்கான ககர சகரப் பரிமாற்றமே உண்மையாகக் கொள்ளுதற் குரிய தென்றும், சேரன் என்னும் குடவேந்தன் குடிப் பெயர் தூய தென் சொல்லேயென்றும், கேரன், கேலன், கேரளன் என வடமொழியில் வருபவையெல்லாம் சேரல் என்பதன் திரிபேயென்றும், ஐயந்திரிபற அறிந்துகொள்க. |