பக்கம் எண் :

மொழியாராய்ச்சியும் மொழியகழ்வாராய்ச்சியும் ஒன்றே 73

மேற் காட்டிய எடுத்துக்காட்டுகளின்று தெற்றெனத் தெரிந்துகொள்க. ஒருகால்
கன்னடத்திலுள்ள ககரமுதற் சொற்களையே அவற்றிற்கு நேரான சகரமுதல்
தமிழ்ச்சொற்கட்கு மூலமாக ஒருசாரார் கொள்ளலாம். அதன் புரைமையை,
அச் சொற்களின் வேர் நோக்கியும்; செங்கதிர (செங்கதிர்), செந்தெங்கு,
செம்பு, செம்புகுட்டிக (செம்புகொட்டி), செம்பொன், செம்போத்த
(செம்போத்து) முதலிய சொற்கள் கன்னடத்திலும் தமிழிற் போன்றே சகரம்
முதலாயிருப்பதை நோக்கியும் தெரிந்து தெளிக.

     கால்டுவெலாரும் இவற்றை மேலை மொழிநூலார் சிலரும், தமிழ்
குமரிக்கண்டத்தின் தென்பால் தோன்றி வளர்ந்து வடக்கு நோக்கிச் சென்று
திரிந்ததென்றும், ஆரியத்திற்கு முந்தியதென்றும், ஈரடிப்படை
வரலாற்றுண்மைகளை அறியாமையாலேயே, மகன் தந்தையையும் பேரன்
பாட்டனையும் பெற்றார் என்பது போல், கேரன் என்பது சேரன் என்பதன்
மூலமென்றும், வ்ருத்த என்னும் வடசொல் தமிழில் வட்டம் எனத் திரிந்த
தென்றும், கொள்ளத் துணிந்தனர். இனி, அவர் மட்டுமன்றி, ஆராய்ச்சி
யில்லாது நூற்கல்வி யொன்றேயுடையாரும். ஆட்சியிலும் அதிகாரத்திலு
மிருப்பவர் கருத்திற்கு மாறாகச் செல்லுதல் கூடாதென்னும்
கொள்கையுடையாரும், ஆகிய இருசார் தமிழ்ப் பேராசிரியரும் அக்
கொள்கையே கொண்டிருப்பது மிக மிக வருந்தத்தக்க செய்தியாகும்.

     சேரன் என்னும் சகர முதல்வடிவே முந்தியமென்றும், அது தூய தென்
சொல்லேயென்றும் கொள்னின், அதன் பேரும் பொருட் காரணமும்
என்னையெனின், கூறுவேன்:

     சேரன் என்னும் பெயர் சேரல், சேரலன் என்னும் வேறிரு
வடிவுகளிலும் தமிழில் வழங்கும். இவற்றுள், சேரல் என்பதே முன்னை
வடிவாம். சேரல் என்பது சாரல் என்பதன் திரிபு. சாரல் என்பது மலையும்
மலைப்பக்கமும் மலையடிவாரமும். முத்தமிழ் வேந்தருள் சேரனே
நெடுமலைத் தொடரைச் சிறப்பாகவுடையவன். அதனால் , அவனுக்குப்
பொறையன், மலையன், மலையமான், மலைநாடன், வானவன், வானவரம்பன்
என்பன குடிப்பெயர்களாய் வழங்கின. ஒரு பொருட்கு அதன் சிறப்புக்
கூறுபற்றிப் பெயர் அமைவதே இயல்பாம். இம் முறைப்படி, பெருமலைத்
தொடரையுடைய சேரனுக்கு மலைத் தொடர்பான பெயரமைந்தது
பொருத்தமே. ஒரு மலைநாட்டில் மக்கள் பெரும்பாலும் வாழ்வது
மலையடிவாரத்திலாதலின், மலைநாடனைச் சாரல் நாடன் என்பது ஒரு
செய்யுள் வழக்காம்.

     எ-டு:

     "வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
      சாரல் நாட"(குறுந். 18)

     "ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குஞ்
      சாரல் நாட"(குறுந். 69)