பக்கம் எண் :

ஆலமரப் பெயர் மூலம் 89

    எ-கா: ஆள் - ஆண், எள் - எண், கோள் - கோண், பெள் - பெண்,
           வேள் - வேண்; களவாளி - களவாணி, வளரி - வணரி;
           சுருளை - சுருணை, திரளை - திரணை.

           ளகரமெய்யீறு பல சொற்களில் யகரமெய்யீறாகத் திரிகின்றது.

     எ-கா:அள் - (அய்) - அயல், இள் - எள் - எய், கள் - (கய்) -
           கை(கய - கச), கொள் - கொய், கோள் - கோய், சாள் - சாய்,
           தொள் -தொய், நெள் - நெய், நொள் - நொய், பொள் -
           பொய், மாள் - மாய், வள் - (வய்) - வை, (கூர்மை), வெள் -
           வெய்.

     இங்ஙனம், சேய்மையுணர்த்தும் சேய் என்னும் சொல்லும் சேள்
என்னும் இறந்துபட்ட சொல்லின் திரிபாயிருத்தல் வேண்டும்.

     ஏ - ஏள் - ஏண், ஏள் - சேள் - சேய்.

     பழம்பாண்டி நாடாகிய, குமரிக்கண்ட முழுக்காலும், முதலிரு கழக
இலக்கிய அழிவாலும், பல்லாயிரம் சொற்கள் இறந்துபட்டொழிந்தன.
அவற்றுள் ஒன்று, சேண் சேய் என்னும் இரண்டையும் இணைத்துக்
கொண்டிருந்த சேள் என்னும் இடைநிலைச் சொல்லென உய்த்துணர்ந்து
கொள்க.

                          - "செந்தமிழ்ச் செல்வி" மே 1967