பக்கம் எண் :

88மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

    "அவனைப்போலே பிரிவுக்குச் சிளையாதபடி" (ஈடு, 9 : 5 : 3)

     உதை - சுதை(பிங்.) = உதைகாற் பசு.

     "வருகன் றூட்டாப் புன்சுதை" (குற்றா.தல. தக்கன் வேள்வி. 117)

     இங்ஙனமே ஏண், ஏணி என்னும் பெயர்களும் முறையே சேண், சேணி
எனச் சகரமுதலாகும்.

     ஏண் = 1. உயர்ச்சி

     "ஏணிலி ருந்தேன்" (திவ். பெரியதி. 1 : 6 : 1)

     2. எல்லை (திவ். திருவாய். 2 : 8 : 8. பன்னீ..)

     3. இறுமாப்பு. ஏணாப்பு = இறுமாப்பு.

     4. செருக்குப் பேச்சு.

     "ஏண்பல பகர்ந்தனை" (கந்தபு. அவைபுகு. 153)

     சேண் = 1. உயரம் (திவா.).

     "சேண வந்தர நோக்கலும்" (கம்பரா. இராவணன் வதை. 39)

     2. மலைமுகடு (பிங்.).

     3. வானம். "சேணெல்லாம் புல்லொளி செலுத்தி" (கம்பரா.
     சூர்ப்பநகை. 20).

     4. விண்ணுலகம். "சேண்மக பதிக்கு நல்கி" (கந்தபு.திருநகர.105)

     5. சேய்மை. "சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு" (புறம். 174: 2).

     6. நீளம் (திவா.). "சேணுற நீண்டு மீண்டு" (கம்பரா. சூர்ப்பநகை.46).

     7. நெடுங்காலம் "சுற்றமொடு முழுது சேண்விளங்கி" (புறம். 2:19).

     ஏணி = 1. ஏறுகருவி.

     2. அடுக்கு. "அண்டத் தேணியின் பரப்பும்" (கந்தபு. சூரன்வதை.485).

     3. எண். "ஏணி போகிய கீழ்நிலைப் படலமும்" (ஞானா. 54 : 1).

     4. எல்லை. "நளியிரு முந்நீ ரேணி யாக" (புறம். 35 : 1).

     சேணி = 1. ஏணி (திவா.).

     2. சேடிய ருலகு. "விஞ்சையர் சேணி செலவிட்டு" (சூளா. சுயம். 192).

    சேண் என்னும் சொல் சேய்மையை யுணர்த்துதலால், அது சேய்
என்னும் சொல்லோடு தொடர்புள்ளதாகவே யிருத்தல் வேண்டும். உயரமும்
சேய்மையும் தொலைவளவில் ஒன்றாதலால், உயர்ச்சிப்பொருட்சொல்
சேய்மைப் பொருளு முணர்த்துதல் உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்ததே.
உயர்ச்சி மேற்றிசையும் சேய்மை பக்கத்திசையுமா யிருத்தலே அவ்
விரண்டிற்கும் வேற்றுமை.

     பல ணகரமெய்ச் சொற்கள் ளகரமெய்ச் சொற்களின் திரிபாயுள்ளன.