"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே"(நன். 462) என்னும் நூற்பாவால் அமைக்கின்றார். இனி, ஒருசார் பேராசிரியர், விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோல், "ஒன்றுமுதல் ஒன்பான் இறுதி முன்னர்" (437), "ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே" (463) என்னும் தொல்காப்பிய நூற்பா வழுக்களைத் தெளிவாக அறிந்திருந்தும், பல நூல்களிலுள்ள பாட வேறுபாடுகளைக் கண்டிருந்தும், "சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஒளஎனும் மூன்றலங் கடையே"(62) என்பதின் சரியான பாடம் "சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அவைஒள என்னும் ஒன்றலங் கடையே" என்பதே என்பதை யுணராது, தொல்காப்பிய வழுவையோ பதிப்பாசிரியர் தவற்றையோ மறைக்குமுகமாகத் தமிழ்ச்சொல்லை மறைத்துத் தமிழின் பெருமையைக் குறைக்கின்றனர். தொல்காப்பியர்க்கு முற்பட்ட சொல்லையும் பிற்பட்ட சொல்லையும் மொழியாராய்ச்சியாளனே அறிய முடியும். தமிழுக்கு அடிப்படையானவும் தொல்காப்பியர்க்கு முந்தியவு மான முப்பத்தைந்து சொற்கள் சகர முதலனவாக வுள்ளன. இனி, ஒருசார் புலவர், சொற்களின் முன்வடிவையும் பின் வடிவையும் முற்பொருளையும் பிற்பொருளையும் ஆய்ந்தறியாது, முன் வடிவெல்லாம் வழுநிலை யென்றும் பின் வடிவே வழாநிலையென்றும் வலிக்கின்றனர். கருமை குறித்த சொல்லின் கருப்பு, கறுப்பு என்னும் இருவடிவுகளுள், முன்னதே முன்னதாம். இம் முடிவிற்கு ஏதுக்கள் மூன்று, அவையாவன : 1. கள் எனும் வேர்ச்சொல்லினின்று கரு என்னும் வடிவே முந்தித் தோன்றல். கள் - கர் -கரு - கறு, ஒ.நோ:குள் - குர் - குரு - குறு; முள் - முர் - முரு - முறு(வளை) தெள்-தெறு, வெள்-வெறு, என்பவற்றில் றகரவடிவு நேரடியாகத் தோன்றியிருப்பினும், அவை ரகர வடிவாகிய இடைநிலையில்லாதன. கறு என்பதோ அவ் இடைநிலையை உடையது. ரகரத்தின் வன்மையே றகரமாதலால், ரகரமே முந்தியதாம். நெடுங்கணக்கிலும் ரகரம் முன்னும் றகரம் பின்னும் வைக்கப்பட்டிருத்தல் காண்க. ஒளிர் - ஒளிறு, முரி-முறி (வளை) என்பனவும் றகரத்தின் பின்மையைக் காட்டும். 2. கருமை குறித்த சொற்களுள், மாபெரும்பாலனவும் இருவகைப் பண்டை வழக்கும் ரகரத்தையே கொண்டிருத்தல். |