பக்கம் எண் :

94மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

     எ-கா :

தனிச்சொற்கள் :

     கரம்பை, கரி, (அடுப்புக்கரி) கரிசல், கரிச்சான், கரியவன் (திருமால்),
கருக்கம் (கருமுகில்), கருக்கல், கருக்கு, கருகல், கருப்பை, (கருப்பெலி) கார்,
காரி (கருங்காளை)

கூட்டுச்சொற்கள் :

     கரிக்குருவி, கரிக்கோடு, கரிச்சட்டி, கரித்துணி, கரிமா, கரியடுப்பு,
கரியமால், கரியமான், கருகுமணி, கருங்கடல், கருங்கரப்பான், கருங்கல்,
கருங்களமர், கருங்காடை, கருங்காணம், கருங்காந்தள், கருங்காலி, கருங்காவி,
கருங்கிளி, கருங்குட்டம், கருங்குதிரை, கருங்குரங்கு, கருங்குருவி,
கருங்குவளை, கருங்குளவி, கருங்குறுவை, கருங்கொண்டல், கருங்கொல்,
கருங்கொள், கருங்கோழி, கருங்கோள், கருஞ்சம்பா, கருஞ்சாந்து,
கருஞ்சாமை, கருஞ்சாரணை, கருஞ்சாரை, கருஞ்சிவப்பு, கருஞ்சீரகம்,
கருஞ்சுரை, கருஞ்செவ்வாப்பு, கருஞ்சேரா, கருஞ்சோளம், கருந்திருக்கை,
கருந்தேள், கருநந்து, கருநாகம், கருநாடு, கருநார், கருநாரை, கருநிமிளை,
கருநெய்தல், கருநெருஞ்சி, கருநெல்லி, கருநொச்சி, கரும்படை, கரும்பலகை,
கரும்பிள்ளை, கரும்பிறை, (கரும்பளிங்கு) கரும்புடையன், கரும்புல் (பனை),
கரும்புள், கரும்புள்ளி, கரும்புற்று, கரும்புறா, கரும்பூனை, கரும்பேன்,
கரும்பொன், கருமணித் தக்காளி, கருமணல், கருமணி, கருமருது, கருமலை,
கருமா, கருமுகில், காரரிசி, காராடு, காராளர், காரெலி, காரெள், காரொக்கல்.

     3. றகரங் கொண்ட வடிவு வழிப்பொருட்கே ஏற்றமை. இற்றைத் தமிழ்
நூல்களுள் முதலதான தொல்காப்பியத்தில், "கறுப்பும் சிவப்பும் வெகுளிப்
பொருள" (855) என்று, கறுப்பு என்னும் சொல் சினப்பொருளைக்
குறிப்பதாகவே கூறப்பட்டுள்ளது. கறுத்தவரும் சிவந்தவருமாக இருவகை
நிறத்தார் தமிழகத்துத் தொன்றுதொட்டுளர். சிவப்பு என்றது
பொன்னிறத்தையும் செம்பொன்னிறத்தையும். சினத்தினால், கரியர் முகம்
மிகக் கருக்கும்; சிவப்பர் முகம் மிகச்சிவக்கும்; கண் இருநிறத்தார்க்கும்
சிவக்கும்.

     "செறுவர் நோக்கிய கண்தன்

     சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே"(புறம் : 100)

என்னும் புறப்பாட்டடியைக் காண்க.

     பொருள் மாறும்போது சொல்வடிவும் மாறவேண்டுமென்பது
சொல்லாக்க நெறிமுறையாதலால், கருப்பு என்னும் சொல் சினத்தைக்
குறிக்கும்போது கறுப்பு என்றாயிற்று.

     "வசையுநர்க் கறுத்த பகைவர்"(பதிற்றுப். 32:15)

     கறுத்தோர் = பகைவர்.

     "கறுத்தோ ருறுமுரண் தாங்கிய."(பதிற்றுப். 66:9)