பக்கம் எண் :

106மறுப்புரை மாண்பு

-106-

7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

தொல்காப்பியர் நூன்மரபில் எழுத்துகட்கு அளவு கூறிவருமிடத்து,

''மெய்யி னளபே யரையென மொழிப'' (11)
என்று மெய்யெழுத்திற்கு அளபு குறித்தபின், சார்பெழுத்து மூன்றும் அவ்வளபே கொள்வதால்,
''அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே'' (12)
என்று நூற்பாவியற்றி, அரையினுங் குறுகிக் காலாக வொலிக்கும் மகரக் குறுக்கத்தை,

''அரையளவு குறுகல் மகர முடைத்தே
இசையிடன் அருகுந் தெரியுங் காலை'' (13)
என்று கூறி, அதன் சிறப்பான வரிவடிவத்தை,

''உட்பெறு புள்ளி யுருவா கும்மே'' (14)
என்று அறிவித்தார்.
இங்ஙனம், உரிய இடத்திலும் தொடர்ச்சியான முறையிலும் கூறப்பட் டுள்ள புள்ளிச் செய்தியை,

''மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்'' (15)
என்னும் புள்ளியெழுத்துப் பற்றிய நூற்பாவுக்கு முற்படக் கூறியது, இடவழு என்னும் குற்றமெனக் கொள்வது பொருந்தாது.

    ''எழுத்தெனப் படுப.
    ..............
   முப்பஃதென்ப
   சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.'' (1)

   ''அவைதாம்
   குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
   ஆய்தம் என்ற
   முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன'' (2)

என்று நூல் தொடக்கத்திலேயே புள்ளிச் செய்தி கூறப்பட்டிருப்பதால், அதை ஆசிரியன்வாய்க் கேட்டறிந்த மாணவனுக்கு, ''உட்பெறு புள்ளி யுருவா கும்மே.'' என்பது புதியதாகவும் விளங்காததாகவும், முற்படக் கூறல் என்னுங் குற்றத்தின் பாற்பட்டதாகவும், கொள்ளப்படா தென்க.

   இனி, தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், விரித்துக் கூறல், ஒப்பின் முடித்தல், ஒன்றினம் முடித்தல், தன்னின முடித்தல், மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்றி முடித்தல் முதலிய உத்திகளை நோக்கினும், ''உட்பெறு புள்ளி யுருவா கும்மே'' என்னும் நூற்பா நூன்மரபில் இடம் பெற்றிருப்பது வழுவாகத் தோன்றாது.