|
முல்லை நாகரிக நிலையிலிருந்த நாடோடிகளான வேத
ஆரியர் இந்தியாவிற்குள் புகுமுன்னரே, தமிழ் முத்தமிழாய் வழங்கிற்றென்பதையும், தமிழ்
நாகரிகம் பனிமலை (இமயம்) வரை பரவியிருந்ததென்பதையும் நினைவிலிருத்துதல்
வேண்டும்.
பண்டைக் காலத்தில் யாழ் என்னும்
தமிழ்ப்பெயர் நரப்புக் கருவி களையெல்லாம் குறித்தவகை யொட்டி, இன்று வீணை என்னும்
வடசொற் பெயரும் ஒரு கம்பியுள்ள இரப்போன் யாழ்முதல் எழு கம்பியுள்ள செங்கோட்டியாழ்
வரை எல்லாக் கம்பி யிசைக்கருவிகளையும் குறித்து வருகின்றது.
செங்கோட்டியாழ் வடசொற் பெயர்
பூண்டபின் தமிழ்ப்பெயரை யிழந்தமைக்கு, முதுகுன்றம் மறைக்காடு முதலிய
தமிழ்நாட்டூர்கள் முறையே விருத்தாசலம் வேதாரணியம் என வடமொழிப் பெயர்
பூண்டபின் தம் தமிழ்ப் பெயர்களை யிழந்தமை சிறந்த ஒப்பனையாம். அவ் வூர்கள்
தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டைச் சேர்ந்தனவாயுள்ளமை அனைவரும் அறிவர். ஆயினும்,
அவற்றை வடசொற் பெயராலன்றித் தென்சொற் பெயராற் குறிப்பின், இன்று புலமக்கள்
தவிரப் பொதுமக்கள் பொருளறியார்.
8. 'பண்டைத் தமிழ்யாழ்
வீணைபோன்றிருந்ததாயின், ஒவ்வொரு யாழிசைஞனும் விலக்க வேண்டியிருந்த
`அதிர்வு'' என்னுங் குற்றத்திற்கு எங்ஙனம் காரணங்காட்ட முடியும்? யாழின் மெலிவு
நரம்பைத் தெறித்த போது, அது ஏனை நரப்பிசையி னின்பம் நுகரப்படாதவாறு அதிர்ச்சியை
உண்டுபண்ணியதாதலின், அதை உடனே நிறுத்துதற்கு யாழோன் கையில் ஒரு கோல்
இருந்தது. இக் கோலுருவம் அமராவதி யாழோன் சிலையில்
பொறிக்கப்பட்டுள்ளது.'
பேரியாழ் முதலிய மூன்றியாழ்களிலும்,
ஒலிபெருக் குறுப்பாகத் தரப்புச்சித்தாரில் பண்மொழி நரம்பிற்குக் கீழ்
அமைத்திருக்கும் அதிர்வு நரம்புகளைப்போல், சில அதிர்வு நரம்புகள் அமைக்கப்
பெற்றிருந்தன. பண்மொழி நரம்புகளை இசைக்கும்போது, அவ் அதிர்வு நரம்புகள் ஒலி
பெருக்குவதுடன் அதிர்வையும் உண்டுபண்ணும். யாழ் இசைப்பவரின் தேர்ச்சிக்குத் தக்கவாறு
அவ் அதிர்வு குறையும், அல்லது நீங்கும். இத்தகைய அதிர்ச்சி அல்லது இரைச்சல்
நிகழாதவாறு, ஒவ்வோர் யாழிசைஞனும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவ் வதிர்ச்சி
அதிர்வு நரம்புகளால் நேர்ந்ததேயன்றி யாழால் நேர்ந்ததன்று.
இவ்வதிர்வு நரம்புகளால் இனிமை
கெடுகிறதென் றறியப்பட்டபின், பேரியாழிலிருந்த 14 அதிர்வு நரம்புகள் மகரயாழில் 12
ஆகவும் சகோடயாழில்7ஆகவும் குறைக்கப்பட்டு, இறுதியில் செங்கோட்டியாழில்
அடியோடு
விலக்கப்பட்டன. |