பக்கம் எண் :

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு 129

-129-

9. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு

   

    சாத்திரியார் அவர்கள் கூற்றுகளை எம் வழக்கம்போல் ஒவ்வொன்றா யெடுத்து மறுப்பாம்:

    1. 'அந்தணர் என்பார் ஒரு குலத்தார் என்பது தொல்காப்பியத் திலேயே குறிக்கப்பெற்றுள்ளது.'

    அந்தணர் என்னும் பெயர் முதலாவது முனிவரை அல்லது துறவோரையே குறித்ததென, அச் சொல்லமைப்பே காட்டும்.

    அந்தண்மையுடையார் அந்தணர். அந்தண்மை அழகிய அருளு டைமை, ஆதலின், அந்தணராவார் அழகிய அருளுடைய முனிவர்.

    'அந்தண்மை பூண்ட....அந்தணர்.'                     (திருமந்திரம் 234)
    'அந்தண்பொதியிலகத்தியனார்'                      (நக்கீரர்)

(''பொதியில்'' என்பது இங்கு இடைப்பிறவரல்)

    'அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
    செந்தண்மை பூண்டொழுகலான்'                            (குறள். 30)

    எனத் திருவள்ளுவர் தெள்ளத் தெளியப் பொருளுணர்த்தியதுமன்றி, இக்குறளைத் துறவோரைப் பற்றிக் கூறும் ''நீத்தார் பெருமை'' யதிகாரத்தில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
பிங்கலத்தின், குரவரைப் பற்றிக் கூறும் ஐயர் வகையில்,

    'முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர்
    படிவர் உறுவர் பண்ணவர் ஐயர்
    அறவோர் தபோதனர் அறிஞர் அந்தணர்
    துறவோர் கடிந்தோர் மோனியர் யோகியர்
    கோபங் காய்ந்தோர் நீத்தோர் மெய்யர்
    தாபதர் இருடிகள் தம்பெய ராகும்'

    என இருடிகள் (முனிவர்) பெயரைக் கூறும் முதற் சூத்திரத்தில் ''அந்தணர்'' என்னும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

    துறவியர் சிறந்த அறவோரும் தூயோருமாதலின் அந்தணன் என்னும் பெயர் அறவோன் தூயோனையுங் குறிக்கும்.

    முதன்முதலாக மக்களால் அறியப்பட்ட அருளுடையோர் முனிவரே யாயினும் உண்மையில் இறைவனே சிறந்த அருளுடை யோனாதலின், அந்தணன் எனும் பேர் இறைவனையுங் குறிக்கும்.

    'மணிமிடற் றந்தணன்'  (அகம். கடவுள் வாழ்த்து)
    'செந்தீ வண்ண ரந்த ணாளர்'                           (தேவாரம் 1816)

    'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்குரு.'                                  (குறள். 261)