பக்கம் எண் :

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே 31

-31-

 

5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே

 

    நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
    ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்'

    என்னும் பகுதிக்குப் பழைய உரையாசிரியர் உரைத்த உரை,

    'வான வரம்ப, பெரும, நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையை யுடைய பாண்டவ ரைவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெருஞ் சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்!' என்பது.

    ஐவர் என்னும் தொகையடிப்பெயர், பாரதக் காலத்திற்குப் பின்  தமிழிலக்கியத்திலும் வழக்கிலும் பாண்டவரையே குறித்து வந்துள்ளமை, 'ஐவரென் றுலகேத்தும் அரசர்கள்' என்னும் கலித்தொகைத் தொடராலும் (25), 'ஐவருக்குந் தேவி அழியாத பத்தினி' என்னும் பழமொழியாலும், அறியப்படும்.) நூற்றுவர் என்னும் பெயரும், தனித்துவருமிட மெல்லாம், 'நூற்றுவர்பால்.... தூது நடந்தானை' (சிலப். ஆய்ச்சியர் குரவை) என்பதிற் போல் துரியோதனன் முதலியோரையே குறிக்கும். இதனால் தொகைக் குறிப்பு என்னும் நன்னூல் இலக்கணத்திற்கு (நூற்பா 269), ஐவர் நூற்றுவர் என்னும் பெயர்களையே இலக்கியமாக எடுத்துக் காட்டுவர் உரையாசிரியர்.

    ஐவர் என்பதற்கு நேரான பஞ்சவர் என்னும் வடசொல்லும், 'பஞ்சவர்க்குத் தூது நடந்தானை' என்னும் ஆய்ச்சியர் குரவைத் தொடரில் (சிலப். 17) பாண்டவரையே குறித்தது.

    பண்டைத் தமிழகப் பாண்டியர் ஐவராக இருந்து ஆண்டு பஞ்சவர் எனப் பெயர்பெற்றமை, இலக்கியத்தாலும், கல்வெட்டுகளாலும் நிகண்டு என்னும் உரிச்சொற்றொகுதிகளாலும் அறியப்பட்டதே. பதினாறாம் நூற்றாண்டில் விசுவநாத நாயக்கரோடு பஞ்ச பாண்டியர் பொருதார் என்னும் செய்தியும் இதை வலியுறுத்தும். ஆயின், அப் பாண்டியர் ஐவருள்ளும் ஒருவனே தலைமையாக மதுரையிலிருந்து ஆண்டான் என்பதும், அவனுக்குள் ஏனைய நால்வரும் அடக்கம் என்பதும், பஞ்சவன் என்னும் ஒருமைப் பெயரே உணர்த்தும். பாண்டவர் ஐவருள் ஒவ்வொருவரையும் பஞ்சவன் என்னும் வழக்கமில்லை; பாண்டவர் என்பதே மரபு.

    புறநானூற் றிரண்டாஞ் செய்யுளில் வரும் ''ஐவர்'' என்னும் சொல், வழக்கும் இடமும் பற்றிமட்டுமன்றி 'ஈரைம் பதின்மரும்' என்னும் தொடர்புடைய தொகையடிப்பெயராலும், 'நிலந்தலைக் கொண்ட' எனத் துரியோதனன் முதலியோர்க்கு வந்துள்ள அடைமொழியாலும், 'பொருது களத் தொழிய' என்னும் வினை முடிபாலும், பாண்டவரையே குறித்தல் வெளிப்படை. இனி, பாண்டவருள் ஒருவனான நகுலன் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவனாதலின், 'அலங்குளைப் புரவி' என்னும் அடைமொழி பாண்டவருக்குக் கொடுக்கப்பட்டுளதெனக் கொள்ளினும் பொருந்தும்.