1
''தமிழ்ப் பொழில்'' 36ஆம்
துணர் 4ஆம் மலரில் மயிலை சீனி. வேங்கடசாமியார் பெயரில் வந்துள்ள ''சேரலாதன்
அளித்த பெருஞ்சோறு'' என்னும் கட்டுரையைக் கண்டு திடுக்கிட்டேன்.
கடந்த ஐயாயிரம் ஆண்டாக மெலிவுற்றும்
நலிவுற்றும் வந்து குற்றுயிராய்க் கிடக்கும் தமிழ், அயன்மொழியாரால் மட்டுமன்றித்
தமிழ ராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலை சீனி, வேங்கடசாமியார் ஒருவரே
தமிழ்ப் பகைவரின் கூற்றுகளை ஆற்றலொடு மறுத்து வருகின்றார் என்று பற்றுள்ள தமிழ்ப்
புலவர் உற்றுவரும் மகிழ்ச்சிக்கு மாறாக எழுந்துள்ளதக் கட்டுரை.
தமிழின் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தைக்
கடல் கொண்டு ஆரிய வருகைக்கு முற்பட்ட பழந்தமிழிலக்கியமனைத்தும் இறந்துபட்டபின்,
தமிழின் முதுபழந் தொன்மையைக் காட்டி நிற்கும் சான்றுகள், பஃறுளி யாற்றுச்
செய்தியும், சேரலாதன் பெருஞ்சோற்றுச் செய்தியும் ஆகிய இரண்டே. இவற்றுள் பஃறுளியாறு
மலையாள நாட்டின் தென்கோடியில் ஓடும் பறளியாறேயென்று ஒரு பிராமணத் தமிழ்ப் புலவரால்
ஏற்கனவே கூறப்பட்டுளது. இன்று, சேரலாதன் பெருஞ்சோறும் கடைக்கழகக் காலத்ததேயென்று ஒரு
தமிழகத் தமிழ்ப் புலவரால் கூறப்பட்டுவிட்டது.
எவ்வினத்தரேனும், காய்தல் உவத்தல் அகற்றி
நடுநிலையாய் ஒரு பொருளை ஆய்ந்து அதன் உண்மை கண்டுரைப்பின் ஒப்புக்கொள்ளத் தக்கதே
ஆயின், ''சேரலாதன் அளித்த பெருஞ்சோறு'' என்னுங் கட்டுரை அங்ஙனம் ஆய்ந்தெழுதியதா
என்பதை இங்கு ஆய்ந்து காண்பாம்.
'மண்டிணிந்த நிலனும்' என்று தொடங்கும்
புறநானூற்று இரண்டாஞ் செய்யுளில்,
'வான வரம்பனை நீயோ பெரும! அலங்குளைப்
புரவி ஐவரொடு சினைஇ
|