முடிநாகர் நாகமுடியணிந்திருந்தவர். அவர் சூட்டு
நாகர் எனப்படுவர். முடிநாகவரையர் - முடிநாகராயர். இரு சொற்றொடர்களில் அரையன்
என்பது வருஞ்சொல்லாக நின்று ராயன் என்று திரிவதை மரூஉவாக அல்லது சிதைவாகக்
கொள்ளல் வேண்டும். அரையன் என்னும் பெயர் தலைவன் என்னும் பொருளதாகவோ, இடுகுறிப்
பெயராகவோ, இருந் திருக்கலாம். வேத காலத்திலேயே ஆரியர்க்குத் தமிழ்நாட்டொடு
தொடர் பிருந்ததென ஆராய்ச்சியாளர் கூறுவதால், தென்சொற் சிதைவான ஆரியச் சொற்கள்
வேதத்தில் இடம்பெற்றமை வியப்பன்று.
வானவரம்பன் என்பது வானளாவும் மலையரசன்
என்றும், இமயவரம்பன் என்பது பனிமலையை (இமயத்தை) எல்லையாகவுடைய நாட்டரசன் என்றும்
பொருள்படுவதாகும். இவை சேரர் பெயர்கள். இவற்றுள் முன்னது எல்லார்க்கும் பொது;
பின்னது வடநாட்டை அடிப்படுத்திய ஒரு சிலர்க்கே சிறப்பு.
நூறடி உயரமுள்ள மாடங்களும் இருநூறடி யுயரமுள்ள
கோபுரங் களும், வான்றோய்வனவாகவும் வானத்தைத் துளைத்து மீச்சென்றன வாகவும் உயர்வு
நவிற்சியாகக் கூறப்படும்போது, பத்தாயிரம் அடி உயர்ந்த குடமலை ஏன் வான வரம்பென்று
மீக்கூறப்பட முடியாது?
தமிழகத்தின் வடவெல்லை வரலாற்றிற்கெட்டிய
காலமெல்லாம் வேங்கட மலையாகவே இருந்திருப்பினும், மூவேந்தருள்ளும் வலிமை மிக்கவர்
அவ்வப்போது பனிமலைவரை படையெடுத்துச் சென்று நாவலந்தேய முழுவதையும் தம்
ஆட்சிக்குட்படுத்தியமை தமிழிலக்கியமும் தமிழ்நாட்டு வரலாறும் கற்றார் அனைவரும்
அறிந்ததே. கி.பி.11ஆம் நூற்றாண்டிலிருந்த இராசேந்திரச் சோழன் கங்கைவரை சென்று
அதைக் கைக்கொண்டான். 3ஆம் நூற்றாண்டிலிருந்த செங்குட்டுவன் வடவரசரை யெல்லாம்
வணக்கிப் பனிமலையிலிருந்து கண்ணகி சிலைக்குக் கற் கொணர்ந்தான். அவன் தந்தையாகிய
சேரலாதன், ''குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட'' பெருவேந்தன். 2ஆம்
நூற்றாண்டிலிருந்த கரிகால்வளவன், பனிமலை வரை வென்று, அதற்குமப்பால் படையெடுக்க
முயன்றவன்.
''வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்''
(பொருள். 391) என்று தொல்காப்பியம் கூறுவதாலும் தமிழகத்தில் முதற் காலத்தில்
மூவேந்தர்க்கே முடியணியும் உரிமை இருந்ததினாலும் ''படைப்புக் காலந்தொட்டு
மேம்பட்டுவரும் சேரசோழ பாண்டியர் குடி'' எனப் பரிமேலழகர் பாராட்டுவதாலும்,
கடைக்கழகக் காலத்திற்கு முன்பே முத்தமிழ் வேந்தரும் முழுவலி பெற்றிருந்தனர் என்பதும்,
அவருட் சிலரேனும் பனிமலைவரை செங்கோல் செலுத்தியிருக்க வேண்டுமென்பதும், அவ்
வரலாற்றுச் சான்று களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன என்பதும், உய்த்துணரப்படும். இனி
|