கோவலனுக்குக் காட்டு வழியில்
எதிர்ப்பட்ட மறையோன், அக் காலத்துப் பாண்டியனை,
"வாழ்க வெங்கோ
மன்னவர் பெருந்தகை
யூழிதொ றூழிதொ றுலகங் காக்க
வடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்
றிடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி" (சிலப்.11:15-30)
வந்திருந்ததாக
இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
இதில் முன்னோர்
மூவர் செயலை ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் மீது ஏற்றிக் கூறியிருத்தல் காண்க.
திருவாவடுதுறை மடவளாகம்
திருக்கயிலை வழிமரபு என்னுங் கொள்கைபற்றி, அவ் வளாகத் தம்பிரான் ஒருவர்மீது சிவபிரான்
செயலை யேற்றிப் பாடிய புலவரும் உளர். இதனோடு ஒப்புநோக்கின், பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதன்
செயலைக் கடைக்கழகக் காலத்துச் சேரன் மீதேற்றிக் கூறியது வியப்பாகாது.
7. "இரண்டு அரசர்
போர் செய்தால், ஒருவர் பக்கத்திற் சேர்ந்து போர் செய்யவேண்டுவது முறை. அதனை விட்டு
இரண்டுதரத்தாருக்கும் சோறு இட்டான் என்பது உலகத்திலே எங்கும் எப்பொழுதும் நிகழாத ஒன்று"
என எங்கு முண்மை, என்றுமுண்மை, எல்லாமறிதல் முதலிய இறைவன் தன்மைகளைத் தன்மீது ஏற்றிக்கொள்கிறார்
நண்பர்.
என்றி தியூனன்று
ஆத்திரியப் போர்க்களத்திற் செய்த அரும்பெரு நடுநிலைத் தொண்டையும், அவன் அமைத்த
செஞ்சிலுவைக் கழகம் ஆற்றிவரும் அரும்பணியையும், நண்பர் எண்ணிக் காண்க.
முதல் உலகப் போரில் அமெரிக்கர் வணிகம் பற்றியேனும் இரு கட்சியாருக்கும் நெடுங்காலம்
பொருளுதவியே வந்தனர். இன்றும், நல்லுறவின்றிக் கரந்த பகைகொண்ட இந்தியாவிற்கும்
பாக்கித்தானுக்கும் அவர் பல்வகையில் உதவி வருகின்றனர். |