என்று ஒளவையார் அதிகமான்
நெடுமானஞ்சியைப் பாடிய புறப்பாட்டடி கட்கு, 'பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை
விண்ணுலகத்தி னின்று இவ்வுலகத்தின்கட் கொண்டு வந்து தந்ததும்..... சக்கரத்தை
நடாத்திய ...... நின்குடியிற் பழையோரை யொப்ப' என்று, பழைய வுரைகாரர்
உரைத் திருத்தலை நோக்குக. சீனநாடு ''வானவர் நாடு'' (Celestial Empire) என்று பெயர்
பெற்றிருந்ததும், தமிழர் தொன்றுதொட்டுச் சீனநாட்டொடு வணிகம் செய்து வந்ததும்,
இங்குக் கருதத்தக்கன. சூடமும் சீனநாட்டி னின்று வந்ததே.
நிலக்கடலை(வேர்க்கடலை), கூவைக்
கிழங்கு (arrow root), பெருங் காயம், அட்டிகம்(சாதிக்காய்), கிள்ளை
(சாதிபத்திரி), கராம்பூ முதலியவை கீழிந்தியத் திட்டுகளினின்றும்; உருளைக்கிழங்கு,
புகையிலை, குச்சுக் கிழங்கு, அண்டிமா (மரமுந்திரி-cashew) முதலியவை தென்னமெரிக்கா
வினின்றும்; செந்தாழை (pine apple) ஆத்திரேலியாவினின்றும்; பேரீந்து அரபி
நாட்டினின்றும் வந்தவையாகும்.
மிளகாயும் வெளிநாட்டினின்று
வந்ததாகச் சொல்லப்படுகின்றது. மிளகுபோற் காரமான காய்
மிளகாய்.
மக்கைச் சோளம்
வடஅமெரிக்காவினின்று வந்தது. மொக்கை-மக்கை = பெரியது. சில பொருள்கட்கு
வட்டகைதோறும் வேறு பெயருமுண்டு.
எ-கா : |
ஏழிலைக் கிழங்கு
(நெல்லை), குச்சுக்கிழங்கு (சேலம்), மரவள்ளிக்கிழங்கு அல்லது சவரிக்கட்டை (தஞ்சை),
ஆழ்வள்ளிக் கிழங்கு (மேல் வடார்க்காடு). |
இதள் (பாதரசம்) மேல்நாட்டினின்று
வந்தது. ஒட்டகமும் குதிரையும் அரபி நாட்டினின்று வந்தவை. ஒட்டகத்துக்கு
நெடுங்கழுத்தன்-ல், நெடுங் கோணி என்றும் பெயருண்டு. ஒட்டகம் என்பது ஒட்டை என
மருவும்.
வான்கோழி துருக்கிநாட்டினின்று
வந்தது. வரிக்குதிரையும் (zebra), நீர்யானையும் (hippopotamus),
ஒட்டகச்சிவிங்கியும் (camelopard or giraffe) ஆப்பிரிக்காவினின்றும் வந்தவை.
தீக்கோழியை ஒட்டகப் பறவை என்பர் புதுச்சேரியார்.
வெளிநாட்டினின்று வந்த விலங்குகளுள்
குதிரை பல வகைப்பட் டிருந்ததனால், அவ் வகைகளின் நுண்ணியல்புக்கேற்பப் பாடலம்,
கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், புரவி என எண்வேறு பெயரிட்டிருந்தனர்.
இனி, பாண்டியன் குதிரை கனவட்டம் என்னும் வகையையும், சோழன் குதிரை கோரம் என்னும்
வகையையும், சேரன் குதிரை பாடலம் என்னும் வகையையும், குறுநில மன்னர் குதிரை கந்துகம்
என்னும் வகையையும் சேர்ந்தவை. சிறு குதிரை (pony) மட்டம் என்றும், நாட்டுக் குதிரை
தட்டு என்றும் சொல்லப்படும். |