தென்னா டுடைய மாலே போற்றி எந்நாட் டவர்க்கும்
இறைவா போற்றி
என்று திருமால் நெறிக்கும் செல்லும்.
உலகப் பழம்பெரு மொழிகளுள் தமிழைப்போல், வளமும்
தூய்மையும் உள்ளது வேறொன்றுமில்லை. ஈராயிரங் கல் தொலைவு தெற்கே பரவியிருந்த
குமரிக்கண்டப் பல்லாயிரம் உலக வழக்குச் சொற்களும், முதலிரு கழகப் பல்லாயிரம்
தமிழ்நூல்களும், மறைந்த பின்பும்; தமிழ் தனித்து வழங்கும் அளவு சொல்வளங்
கொண்டுள்ளது. மேலையாரியத்தில் இன்றும் நூற்றுக் கணக்கான தென்சொற்கள் உள்ளன.
கீழையாரியமாகிய வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழ்.
பேரா.தெ.பொ.மீ.யின் பேச்சினின்றும்
எழுத்தினின்றும் அவர் செவ்வையாய்த் தமிழை அறியவில்லையென்று தெரிகின்றது. முதலாவது,
அவர் சென்னைவாணர்; நெல்லைநாட்டுச் சிறப்புச் சொற்களையும் தமிழொலிப்பு முறையையும்
அறிந்திலர். வடமொழி யிலக்கியத்தை முன்னும் தென்மொழி யிலக்கியத்தைப் பின்னும்
கற்றதாகத் தெரிகின்றது. தமிழர் கிரேக்க நாட்டுப் பாங்கரினின்று வந்தவர் என்னும்
கொள்கையை ஏற்கின்றவர். தொல்காப்பியர் காலம் கி.பி.முதலாம் இரண்டாம் நூற்றாண்
டென்று என் எதிரிலேயே வடநாட்டாருள்ள ஒரு பொதுக் கூட்டத்திற் சொன்னவர்.
மேற்குறித்த கட்டுரையில், தூய தென்சொற்களைப் பிற மொழிச் சொற்களென்றும்,
தேவையில்லாத ஆங்கிலச் சொற்களை 'இன்றியமையாத தமிழ்ச்சொற்கள்' என்றும்,
கூறியிருப்பதும்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியை அளவை நூலாகக்
கொண்டிருப்பதும்; அவர்தம் தமிழ்ப் பற்றின்மையைப் பறை சாற்றுகின்றன.
பொதுவாக, பிராமணர் வெளியிடும் சிறப்பு மலர்களில்,
மறைமலை யடிகளைப் பின்பற்றுவோரின் கட்டுரைகள் இடம்பெறுவதில்லை. இங்ஙனமே, தமிழ்த்
தூய்மை வேண்டுவோர் வெளியீடுகளிலும் வையாபுரி வழியினர் கட்டுரைகள் இடம் பெறுவதில்லை.
இவ் வேறுபாடு தொடராத வாறு அறிஞர் அம்பலத்தில் தருக்க வாயிலாய் உண்மை
நாட்டப்பெறல் வேண்டும்.
பண்டைநாளில் தமிழர்க்குத் தமிழுணர்ச்சி
நிரம்பியிருந்ததினால், வெளிநாட்டினின்று வந்த பொருள்கட்கெல்லாம் உடனுடன்
தனித்தமிழ்ப் பெயரிடப்பெற்றன. கரும்பு சீன நாட்டினின்று வந்தது. அதன்
செங்கருமைபற்றிக் கரும்பெனப்பட்டது.
'அரும்பெறல் மரபின் கரும்பிவட்
டந்து .................................... தொன்னிலை மரபினின்
முன்னோர் போல' (புறம். 99) |