''சுதேசமித்திரன்'' (தன்னாட்டு நண்பன்) என்னும்
நாளிதழ் தொடர்பில் சென்ற விளக்கணி (தீபாவளி) விழாவன்று வெளிவந்த சிறப்பு மலரை,
அண்மையில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதில், ''தமிழில் பிறமொழிச்
சொற்கள்'' என்றொரு கட்டுரை, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரால்
வரையப்பட்டுள்ளது. எனக்கு ஏற்கெனவே அவர்தம் ஆரியச் சார்பும் தமிழறிவுத் திறமும்
தெரியுமேனும், அக் கட்டுரை கண்டவுடன், இதுதானா இத்தகைய கட்டுரை வெளிவரற்கேற்ற
சமையம் என்னும் வினா என் உள்ளத்தெழுந்து வருத்தியது.
கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக, முன்பு வேத ஆரியத்தாலும்
பின்பு அதனோடு சமற்கிருதம் இணைந்த வட மொழியாலும் நைந்து குற்றுயிராய்க் கிடக்கும்
தமிழை, நாளடைவிற் கொல்ல வரும் இந்தியைச் சிறுபான்மையரான அறிவுடைத் தமிழர்
எதிர்த்துக்கொண்டிருக்கும் இந் நாளில், தமிழ் ஒரு கலவை மொழியென்றும் இந்தியால்
எள்ளளவும் தாக்குண்ணா தென்றும் தவறான கருத்துகள் அமைச்சருள்ளத்திலும் அறிவாராய்ச்சி
யில்லாத மாணவர், பொதுமக்களுள்ளத்திலும் படுமாறு, அக் கட்டுரையைத் தமிழுக்குச்
சிறப்பாக அமைக்கப் பெற்றதாகச் சொல்லப் பெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பொறுப்பு வாய்ந்த தலைமைத் தமிழ்ப் பதவியிலிருப்பவர் வரைந்திருப்பது, மிகமிக
வருந்தத்தக்கதாகும்.
பிராமணர் தென்னாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழ்
தாழ்த்தப்பட்டே வந்திருக்கின்றது. தமிழ் பொது வழிபாட்டுக்குத் தகாத மொழியென்று
தள்ளப்பட்டதே அதன் தாழ்வுத் தொடக்கம். பிராமணர் நிலத்தேவரும் (பூசுரர்) அல்லர் ;
வடமொழி தேவமொழியு மன்று. சிவநெறியும் மால் நெறியும் முறையே, குமரிநாட்டுச் சேயோன்
வணக்கத்தினின்றும் மாயோன் வணக்கத்தினின்றும் தோன்றிய தமிழர் சமயங்கள்.
ஆதலால், வடமொழி தமிழ்நாட்டு வழிபாட்டு மொழியாதற்குச் சிறிதும்
தக்கதன்று.
'தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா
போற்றி'
என்பது, |