1. தம் மறுப்பில் விபுலாநந்த அடிகளைப்பற்றி
முதலிற் குறிப்பிடும் போதே, 'பழந்தமிழிசை மரபினை ஆராய்தலையே தமது வாழ்க்கை
நோக்கமாகக் கொண்டுழைத்துவரும் அருட்டிரு விபுலாநந்த அடிகளார்' என்று கூறியிருக்கிறார்
நண்பர் வெள்ளைவாரணர். அடிகளார் பல ஆண்டுகளாகத் தமிழிசையை ஆராய்ந்து வருவது
தமிழுலகனைத்தும் அறிந்ததே. ஆனால், பிறர் தமிழிசையை ஆராயவில்லை என்பது இதனால்
எங்ஙனம் பெறப்படும்? யான் இயற்றமிழில் இறங்கிய அளவு இசைத்தமிழில் இறங்காவிடினும்,
சென்ற பன்னீராண்டுகளாக என்னாலியன்றவரை இசைத்தமிழையும் ஆராய்ந்து வருகிறேன்
என்பதையும், நால்வகை இசைக் கருவிகளும் என்னிடமுள என்பதையும், ஒவ்வொரு வகையிலும்
ஒன்றேனும் ஓரளவு இயக்குவேன் என்பதையும், அச்சில் முடிகல (கிரௌன்) அளவில் 200
பக்கம் வரும் இசைத்தமிழ்ச் சரித்திரம் என்னும் நூலையும் சென்ற ஆண்டிலேயே எழுதி
முடித்தேன் என்பதையும் நம் நண்பர் அறியக்கடவர். ஆனால், இதுவரை சொற்பொழிவு
வாயிலாகவோ கட்டுரை வாயிலாகவோ சிறிதும் ஆரவாரம் செய்திலேன். ஆயினும், என்னோடு
நெருங்கிப் பழகிய சில நண்பருக்கு எனது சிற்றளவான இசையாராய்ச்சி
தெரியாமலிருந்திருக்காது. மேலும், எத்துறை ஆராய்ச்சியாயினும், அது நெறிமுறையும் உண்மை
முடிபும்பற்றிப் போற்றப்படுமே யன்றி அளவும் உழைப்பும்பற்றி மட்டும்
போற்றப்படாது.
2. நம் அடிகளுக்குமுன் இசைத்தமிழை ஆராய்ந்தவ
ரெல்லாரும் இயல்நூற் பயிற்சி இசைப் பயிற்சி இவ் விரண்டுள் ஒன்றே யுடையார் என்று
குறித்துள்ளார் நம் நண்பர். காலஞ் சென்ற ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் இவ்
விரண்டிலும் இணையறத் தேர்ந்தவர் என்பது வெள்ளிடையாதலின், அவரிடத்து இக்
குறையை ஏற்றிக் கூறுதல் நன்றிக்கேடும் புறன் பழிப்புமே யன்றி வேறாகாது. மேலும், இவ்
விரு பயிற்சியோடு சொல்லாராய்ச்சியும் இன்றியமையாதது என்பதை நம் நண்பர்
அறிவாராக.
3. அடிகள் தமிழிசை மிகத் தொன்மை வாய்ந்தது எனக்
கூறி யிருப்பது உண்மையே. ஆனால், துத்தம் என்னும் சுரப்பெயர் உதாத்தம் என்னும்
வடசொல்லினின்று வந்திருக்கலாம் என்றும், யாழ் வேறு வீணை
|