பக்கம் எண் :

விள்3 (பிளவுக் கருத்துவேர்)145

     விருப்பிளத்தல் = நிலம் வெடித்தல்.
     விரி - விரல் = அகங்கை பிளந்து விரிந்தாற் போன்ற வுறுப்பு.
     விர் - விறு - வீறு. வீறுதல் = 1. பிளத்தல், கீறுதல். "நின் மெய்க்கட் குதிரையோ வீறியது" (கலித். 96). 2. வெட்டுதல். "தெய்வவாள் வீறப் பொன்றினன்" (கம்பரா. சம்பா. 43). 3. அடித்தல். அவனை நன்றாய் வீறினேன், (இ.வ.).
     வீறு = 1. வேறு. "வீறுவீ றியங்கும்" (புறம். 173). 2. தனிமை (W.).3. வெறுப்பு (யாழ். அக.). 4. அடி. நாலு வீறு வீறினேன் (உ.வ.).
     வீறு - வீறல் = வெடிப்பு.
     வீறு - வீற்று = (பெ )1. வேறுபடுகை (பிங்.). 2. துண்டு. "வீற்று வீற்றாகி யோடி விழுதலும்" (கம்பரா. கும்பக. 187). 3. கூறு. "தந்தை தன்னைய ராயிரு வீற்றும்" (இறை. 28). 4. பக்கம். "இருவீற்று முரித்தே சுட்டுங் காலை" (தொல். பொருளியல், 26). 5. தனிமை (w.).
வீற்று = (கு.வி.எ.) வேறாக, வேறுபட்ட பகைவரால். "வீற்றுக் கொளப்படா" (தொல். பொருளியல், 27).
     வீற்றுப் பொருள் = சில்லறைப் பண்டம் (W.).
வீற்றும் = (கு. வி. எ.) மற்றும், வேறும். "வீற்று மாயிரம் வெங்கணை யுந்தினான்" (கந்தபு. சிங்கமு. 402).
வீற்று வீற்று = வெவ்வேறாக. "வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப" (புறம். 35).
     வீற்று வீற்றாக = வெவ்வேறாக.
     வீற்று-வீற்றம் = வேறுபடுகை (W.).
     விறு - வெறு. வெறுத்தல் = 1. பற்றுவிடுதல். "வெறுத்தார் பிறப்பறுப் பாய் நீயே" (தேவா. 310:10). 2. பகைத்தல், அருவருத்தல். "வெறுமின் வினைதீயார் கேண்மை" (நாலடி. 172). 3. துன்ப முறுதல். "எதிரே வருமே சுரமே வெறுப்பவோ ரேந்த லோடே" (திருக்கோ. 243, உரை).
     வெறுக்கை = பகைக்கை, அருவருக்கை
     வெறுப்பு = பகைப்பு, அருவருப்பு.
     வெறு - வேறு = 1. பிரிந்தது. 2. பிறிது. 3. கூறுபாடு. "இருவே றுலகத் தியற்கை" (குறள். 374). 4. பகைமை (சீவக 755). 5. எதிரானது, நேர்மாறானது. 6. தீங்கு. "அறிந்ததோ வில்லை நீவே றோர்ப்பது" (கலித்.95). 7. புதியது. "யாம்வே றியைந்த குறும்பூழ்ப் போர்கண்டேம்" (கலித். 95). 8. தனி. (சீவக.1872).
     வேறு-வேற்று = (பெ.) அயலாள். விருந்து வேற்று வந்தாற் சமைக்க ஆள்வேண்டும் (உ.வ.).