அரசனுக்கு உதவ இவ்வவை பயன்பட்டதுபோல், பொருளியல் சார்பான கேள்விகளை ஆராய இந்த அவையின் திரிபான இன்னோரவை ஏற்பட்டது. இதில் உறுப்பினராயிருப்பவர் மன்னர் அவையில் உறுப்பினராயிருப்பவருள் பொருளியல் அறிவும் செயல் மரபும் உடைய ஒரு சிலரேயாவர். இது கூடிய இடத்தில் அமைந்திருக்க மேடைப் பலகைமீது குறுக்குக் கம்பிக் (Chequered) கரையுடைய துணி ஒன்று விரிக்கப்பட்டிருந்த காரணத்தினால் இவ்வவை குறுக்குக் கோட்டவை (Exchequer) என்றழைக்கப்பட்டது. (தமிழில் இந்நூல் இதனைப் பொருளவை என்று கூறின் அமையும்) இவ்விரு சிறிய அவைகளில் முன்னது 16-17-ம் நூற்றாண்டுகளில் மன்னர் உயர் அவை (Privy Council) என்ற பெயருடன் வளர்ச்சி பெற்றது. மன்னர் அவையின் சில கடமைகளையும் பொருளவையின் கடமைகளையும் அரசியல் மன்றத்தின் பகுதியாகிய பெருமக்கள் பேரவையின் ஒரு பகுதி பிற்காலங்களில் ஏற்று நடத்தியது. ஆயினும் அப்போதும் பொருள் வழக்கு மன்றம் என்றும் பொருளவை (Treasury Court) என்றும் அதற்குப் பெயர்கள் நிலவின. இவ்விரண்டு அவைகளும் மன்னருக்கு உதவி தந்து அவனை வலிமைப் படுத்தினவேயன்றி அவனைக் கட்டுப்படுத்தவில்லை. மக்களுக்குப் பொறுப்பாட்சி வழங்குவதிலும் அவை எள்ளளவும் பயன்படவில்லை. அவ்வகையில் மிகச் சிறிய முன்னேற்றமாக அமைந்தது முதலாம் ஹென்ரி நிறுவிய சான்றுப் பொறுப்பாளர் முறையே (Jury Systems) யாகும். வழக்குகளில் குற்றஞ் செய்தவர்களைக் கண்டுகொள்ள அந்நாளில் வழங்கிய பண்டைய |