பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்169

வேதங்களை மூன்று வருணத்தாருக்கும் கற்பிக்கலாமெனக் கூறுகின்றன. ஆனால் பிராமணர் அரசர்களிடத்தில் மாணாக்கராக விருந்து உபநிடத உண்மைகளைப் பயின்றார்கள். பெண்களும் அரசவகுப்பினரல்லாதாரும் உபநிடத ஞானம் நிறைந்தவர்களாக விளங்கினர். யாக்ஞவல்கியுடன் எதிர்வாதம் புரிந்தவர்களுள் வச்சக்னு என்பவரின் புதல்வியாகிய கார்கி என்னும் பெண் ஒருத்தி. ஆகவே, உபநிடதம் பிராமணருக்கோ ஆரியருக்கோ உரியன வல்ல என்பது நனி விளங்குகின்றது.
     உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருத்தல் என்பது பொருள். மாணாக்கன் ஆசிரியனுக்குக் கிட்ட இருந்து உயர்ந்த ஞான இரகசியங்களைப் பெறுதல் என்னும் பொருளில் உபநிடதம் என்னும் பெயர் ஆளப்பட்டு வந்தது. இது இரகசியம் எனவும் வழங்கப்பட்டது. உபநிடதம், புத்தக வடிவாக எழுதப்படாது குரு மாணாக்கனுக்கு விளக்கும் சில உண்மை இரகசியமாக இருந்து வந்தது. இது இறைவன் தக்கணாமூர்த்தியாகக் கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வர்க்கு ஞான மருளியது, தாயுமானவருக்கு மோனகுரு ஞானோபதேசஞ் செய்தது, மெய்கண்டாருக்கும் பரஞ்சோதி முனிவர் ஞான மருளியது போன்றது. ஆகவே, உபநிடத ஞானங்கள் மறை வேதம் எனப்பட்டன-வேதம் என்பது `வேழு என்னும் அடியாகப் பிறந்து மறைக்கப்பட்டுள்ளது என்னும் பொருள் தருவது. உபநிடத உண்மைகளைப் பக்குவருக்கன்றி ஏனையோருக்கு உபதேசித்தல் கூடாதென உபநிடதங்கள் வற்புறுத்துகின்றன. ஆரிய மொழியில் உள்ள வேதங்கள் இவ்வாறு மறைபொருளுடையனவும் மறைத்துக் கூறப்படுவனவு மல்ல. ஆகவே அவை பிற்காலத்தில் தமிழ்மக்கள் வழங்கிய வேதம் என்னும் பெயரையே தமது சமயப் பாடல்களுக்கும் இட்டாராதல் வேண்டும். தீக்கை முதலிய சமய சம்பிரதாயங்கள் இவ் வுபநிடத வழக்குகளைப் பின்பற்றியனவே. இவை பழமை தொட்டுத் தமிழர்களிடையே காணப்படுவனவாகும்.