"காட்டுக் களைந்து கலங்கழீஇ யில்லத்தை யாப்பிநீ ரெங்குந் தெளித்துச் சிறுகாலை நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து இல்லம்பொலிய வடுப்பினுள் தீப்பெய்க" | | என்றபடி அக்காலத்து இல்லத்திற் செய்யத் தகுவனவற்றைச் செய்யாநிற்பர். கோழிச் சேவல்கள் விடியற்காலத்தை அறிந்து கூவாநிற்கும். சேவற் பறவைகள் தத்தம் பேடைகளை அழையாநின்று தீங்குரல் செய்யும், கூட்டிலே உறைகின்ற கரடி புலி முதலிய வலிய விலங்குகள் முழங்காநிற்கும். முதுகு காட்டிப் போந்த வீரரும் வெட்டுண்ட வீரரும் விடுத்த யானைகளும் குதிரைகளும் ஆனிரைகளும், தோல்வியடைந்த அரசர்கள் திறமையாகக் கொணர்ந்த கலங்களும், அவைபோன்றன பிறவும் அரண்மனையை நோக்கிச் செல்லும். இங்ஙனம் கங்கையாறு கடலிற் கலந்தாற்போல, உலகிற் பொருள்களெல்லாம் மதுரையை அடையும். | "இம் மாநகரில் கோயில்கொண்டு செங்கோல் செலுத்தும் பாண்டியன் `வைகறையாமந் துயிலெழுந்து காலைக் கடனைக் கழித்துச் சந்தனம் பூசி, மார்பிலே மாலை தாங்கிக் கையிலே வீரவளையுடன் கணையாழியைச் செறித்துக், கஞ்சியிட்ட துகிலை யுடுத்து, அதன்மே லணியும் அணிகலன்களை அழகுறவணிந்து, கொலுமண்டபத்திலே வீற்றிருப்பான். இருந்த வளவிலே, ஏனாதிப்பட்ட முதலிய சிறப்புப்பெற்ற படைத்தலைவர் அவனது வெற்றித் திறத்தை வாழ்த்துவர். பின்னர் அரசன், தான் நாடு நகர் பெறும்படியாகவும், தன் வெற்றி சிறக்கும்படியாகவும் உதவிய வீரரையெல்லாமழைத்துப், பாவலருடனே பாணர் பாட்டியரையும் அழைத்து, யானை தேர் என்பன போன்ற பரிசளிப்பான். அங்ஙனம் பல பல பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தலால் அந்நாட்டில் வாழுங் குடி மக்கள் செல்வம் பெருகியிருப்பர்." | (மதுரைக் காஞ்சி) | | |
|
|