பக்கம் எண் :

மொழி65

     "பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டின் வடவெல்லை கிருஷ்ணாநதியெனச் சிற்பசாத்திரம் கூறுகிறதென்று கேட்டிருக்கின்றேன்" என மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள் சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் என்னும் நூலிற் கூறியிருக்கின்றார். ஒருபோது விந்தியமலை தமிழ்நாட்டின் வடவெல்லையா யிருந்ததெனத் தெரிகிறது.
     "தொல்காப்பியஞ் செய்யப்படுகிற காலத்தில் நெல்லூர்ச் சில்லாவின் தென்கோடியும், சித்தூர், வடஆர்க்காடு, செங்கற்பட்டு, தென்ஆர்க்காடு, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, மலையாளம், நீலகிரியென்னும் சில்லாக்களும், தென்கன்னடம் சில்லாவின் முக்காற்பங்கும், மைசூர் இராச்சியத்தின் தென்பாதியும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை என்னும் இராச்சியங்களும், கடலின் வாய்ப்பட்ட குமரியாற்றோடு கூடிய பனை நாடுகளும், தமிழ் வழங்கு நிலங்களாகவே இருந்தன என்பதும், அக்காலத்து இந்நிலங்களில் வேறுமொழிகள் வழங்கியதில்லை யென்பதும் நன்கு விளங்குகின்றன." சங்கநூல்-கா. ர. கோவிந்தராச முதலியார்.
"வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரி"
     எனச் சிறுகாக்கைபாடினியார் தமிழ்நாட்டுக் கெல்லை கூறியிருக்கின்றார். இது, தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சொல்லப்பட்டதெனப் பேராசிரியர் கூறுகின்றனர். சிறுகாக்கைபாடினியாரை ஒழிந்து பனம்பாரனார் சிகண்டியார் இளங்கோவடிகள் நன்னூலார் முதலாயினோரெல்லாம் வேங்கடத்தையும் குமரியையுமே, வடக்குக்கும் தெற்குக்கும் எல்லையாகக் கூறியிருக்கின்றனர். நன்னூலார் காலத்தில் குமரி ஆறு இருக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் குமரியம் பெருந்துறை (15-15) என்பதற்கு அடியார்க்குநல்லார் குமரி ஆறு எனப்பொருள் கூறுமாற்றானும் மணிமேகலையில் "குமரியம் பெருந்துறை"