பக்கம் எண் :

மொழி75

4. தமிழின் சிறப்பு

"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."
        என்று ஆன்றோர் கூறிய பொருள் சிற்சில மொழிகளை ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இனிது விளங்கும். பண்டைக் காலந்தொட்டு நூல் வழக்கினும் உலக வழக்கினும் திருத்தமடைந்து மக்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வனவாய்ப் போதரும் பழைய மொழிகள் சிலவேயாம். இப்பழைய மொழிகளுள் தமிழ்மொழியை ஒழித்து ஒழிந்தவற்றிற் பெரும்பாலன உலகவழக்கின்றி இறந்தொழிந்தன. தீஞ்சுவை விளைக்கும் முப்பழத்தினும் இனிய மெல்லிய ஓசை இன்பம் வாய்ந்த செந்தமிழ் மொழியோ, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன் இளமை கெடாது கழிபெரு மகிழ்ச்சியோடு உலவி வருதலை உற்று நோக்குங்கால், அதனை வழங்கிவந்த நன்மக்கள் எவ்வளவு நுண்ணறிவும், எவ்வளவு அமைதியான தன்மையும், எவ்வளவு நாகரிகமும் உடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதை அறிகின்றோம். பழைய நாட்களில் வேறு பல மொழிகளைப் பேசி வந்த மக்கள், நுண்ணறிவிலும் அமைந்த குணத்திலும் நாகரிகச் சிறப்புற்றவர்களா யில்லாமையினால், அவர்கள் வழங்கிய மொழிகள் எல்லாம் ஆண்டுகடோறும் மாறுதல்கள் பல எய்தி, இலக்கண வரம்பில் அகப்படாவாய்ப் பயனின்றிக் கழிந்தன. தமிழைச் சூழ இஞ்ஞான்று நடைபெறும் பல மொழிகளை ஆராய்ந்து பார்ப்பவர்க்கு அம்மொழிகள் ஓர் இலக்கண வரம்பில்லாமல் பலபடச் சிதறி ஒழுங்கின்றிக் கிடத்தல் தெள்ளிதிற் புலனாகும்.

"தமிழ் கிரேக்கமொழியினும் நயமான செய்யுள்நடையுடையது
லத்தீன் மொழியினும் பூரணமானது"

(வின்ஸ்லோ்)

"மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும்
சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று."

(டெய்லர்)