பக்கம் எண் :

90தமிழகம்

ழன்னைபா லடைக்கலம் புகவே, நந்தமிழன்னை தன் மக்கள்பால் வைத்த அன்பினும் மிடிபட்டு வந்த அவ் வயற்புதல்வர்பால் அன்பு மிக வைத்து அவரை மகிழ்விப்பான் வேண்டி, அவர் மாற்றித் தந்த விருத்தப் பாக்களாம் அணிகலன்களைத் தனக்கு இசைந்தவாற்றாற் பலவகைப்படத் திரித்துச்சிறக்கச் செய் தணிந்திடுவாளாயினள். இதனாலன்றோ கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் திகழ்ந்த சைவ சமயாசாரியரான மாணிக்கவாசகர் காலந்தொட்டு இற்றைநாள் வரையும் காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலாயினவெல்லாம் பலதிறப்பட்ட விருத்தப் பாக்களினாலேயே யாக்கப்படுவவாயின. (யாப்பருங்கலவிருத்தி முகவுரை.)

1. அணி

     அணியிலக்கணமென வொன்று தொல்காப்பியத்தில் தனியாகக் கூறப்படவில்லை. தொல்காப்பியத்திற் கூறிய உவமைப் பகுதியே எல்லாப் பகுதிகளையும் தன்னுளடக்கி நிற்குஞ் சிறப்புடையது. தண்டியலங்காரம், வீரசோழியம் முதலிய பிற்றைஞான்றை நூலுடையார் வடநூலார் மதமே பற்றி உவமமொன்றனையே வாளா பல பெயர்களாற் பெருக்கி அவற்றானு மவை யடங்காமை கண்டு இளைப்புற்றார்.
     பேராசிரியர் உவமவிய லுரையில், "இனி இவ்வோத்தினுட் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும், சொல்லதிகாரத்துள்ளும் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்து ஆசிரியர் நூல் செய்தாரு முளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணியென்று கூறப்படா. பொருளதிகாரத்துள் (வரும்) பொருட்பகுதி யெல்லாம் செய்யுட் கணியாகலான், அவை பாடலுட் பயின்றன என்றதனால், அவற்றை தொகுத்து அணியென்று கூறாது, வேறு சிலவற்றை உரைத்து அணியென்று கூறுதல் பயனில் கூற்றாம்" என்று பிற்காலத் தணிகளை மறுத்துக் கூறுதல் காண்க.