செய்யுளாவது "பாட்டுரை நூலே" (செய் - 78) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தாற் கூறிய ஏழு நிலமும் அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது"-நச்சினார்க்கினியர். |
"வேற்று நாட்டுச் சொற்களும் பொருள்களுமான ஆடை அணிகலன்கள் தன்னை வந்து அணுகப்பெறாமல் தன் தெய்வ வளநாட்டு ஆடை அணிகலன்களையே நமது தண்டமிழ்த் தாய் தன் மேற்கொண்டு பொலிந்தாள். அந்நாளில் அவளது ஆம்பற் செவ்வாயினின்றும் அமிழ்தம் ஒழுகினாற்போற் புறம் போந்த வெண்பா அகவற்பா கலிப்பா என்னும் இயற்கைச் செந்தமிழ்ப் பாக்கள் பாவினங்களின் அரிய பெரிய அமைதிகளையெல்லாம் முற்றவெடுத்து முடியவிளக்கும் அருந்தமிழ் நூல் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய மொன்றுமேயாம்." |
"இனி அந்நாட் கழிந்தபின் இடைப்பட்ட காலத்தே விளைபொருள் வளனில்லா வேற்று நாட்டவர் வறுமை கூர்ந்து செந்தமிழ்த் தனி வளநாடு புகுந்தார். புகுதர, எல்லாமக்களிடத்தும் அன்புடையவளான செந்தமிழ்த் தாய் அம்மக்கள் தம்மையும் அகம் கனிந்து முகம் மலர்ந்து ஏற்று அவர் வறுமை தீரத் தன்பாலுள்ளவைகளையெல்லாம் உளங்குழைந்து உதவியூட்டி அவரை மகிழ்வித்தனள்; மகிழ்விக்க அவரும் தமது மிடி தீர்ந்து தாம் தமது வறங்கூர் நாடுகளினின்றுங் கொணர்ந்த பன்மொழிச் சில்பணிகளைத் தமது நன்றிக்கு அறிகுறியாக அன்னை கை கொடுத்தார்; நந்தமிழன்னை அவை இயல்பானும் அளவானும் மிகச்சிறிய வாயினும் அன்புறு மக்கள் தந்தன ரென்பதனால் உவராது ஏற்றுத் தன் விலை வரம்பற்ற மணிக்கலன்களோடு அவற்றைக் கலந்தணிந்தாள். இம்முறையால் வடமொழியாளர் கொணர்ந்த சில சொற்களும் யாப்பு வகைகளுமாம் அணிகலன்களும் நம் தமிழன்னையின் புனித மேனியின்கட் காணப்படலாயின. |
"இன்னும் இவ்விடைப்பட்ட காலத்தே வடமொழி மக்கள் திரள் திரளாகத் தமிழ் வளநாடு புகுந்து செந்தமி |