மக்களால் வழிபடப்பட்டது. விவிலிய மறையின் பழைய ஏற்பாட்டில் நிம்றொட் என்னும் அரசன் தீவழிபாட்டைப் பலஸ்தீன் நாட்டில் ஆரம்பித்தான் எனக் கூறப்படுகின்றது. இவ் வழிபாடு இன்னும் பாரசீகரிடையே சொராஸ்ரிய மதக் கொள்கையாக நிலவுகின்றது. தீயும் இலிங்க வடிவில் வழிபடப்பட்டது. பீடத்தோடு கூடிய இலிங்கத்துக்குத் தீக்கடை கோலை ஒப்பிட்டுத், தீக்கடைகோலையே இலிங்க வடிவமாக அமைத்து மக்கள் வழிபட்டார்கள் எனச் சில ஆராய்ச்சியாளர் கருதினர். தமிழ் மக்களிடையே முச்சுடர் வழிபாடுகளும் இருந்தன. தீயை எந்த நேரமும் உண்டாக்கி வழிபடுதல் கூடும். ஞாயிற்றையும் திங்களையும் எந்த நேரத்திலும் கண்டு வழிபடுதல் அரிது. ஆகவே அவர்கள் ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களின் வடிவைக் குறிக்கும் வட்டம், வில் அல்லது பிறை, முக்கோணம் வடிவான குண்டங்களை அமைத்து அவைகளில் தீ வளர்த்துக் கடவுளை வழிபடுவாராயினர். இதுவே முத்தீ வேட்டல் என்னும் வழக்கு. ஆரிய மக்களின் தீ வழிபாடு இவ்வுண்மைகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்ததன்று. அவர்கள் காலையில் எழுந்து தோய்ந்து, தீமூட்டி எரித்துக் குளிர் காய்ந்து அதன் பக்கத்தே நின்று கடவுளைத் துதித்தனர். இவ் வழக்கிலிருந்தே அவர்களது அக்கினிகோத்திரம் எனப்படும் தீ வழிபாடு எழுந்தது. சனகன் யாக்ஞவல்கியையும் அவருடன் நின்ற பிராமணரையும் நோக்கி நீவிர் அக்கினி கோத்திரம் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் சரியான விடை அளிக்கவில்லை. இதற்குக் காரணம் ஆரியரது தீ வழிபாடும் தமிழரது தீ வழிபாடும் வெவ்வேறு வகையினவாதலே. ஆகமங்களும் வேதங்களும் நேர்மாறனவை என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. தீ வழிபாடு துரானிய மக்களுக்குரியதென்றே |