செல்லும்போது வீரர் தத்தம் வேந்தர்க்குரிய மாலைகளையணிவர். மாற்றரசரின் நிரைகளைக் கவர்தலே முற்கால அரசர் போர் தொடங்கும் முறையாகும். துரியோதனன் விராடனின் நிரையைக் கவர்ந்தது பாரதத்திற் கூறப்படுகின்றது. மாற்றரசர் நிரையினைக் கவரச்செல்லும் வீரர் தம் முடியிடத்தே வெட்சிப் பூவைச்சூடுவர். ஆகவே, நிரை கவர்தல் வெட்சியெனப்பட்டது. நிரைகவர் தலன்றிப் பகையரசனின் நிலத்தைக் கவர்தற்பொருட்டுப் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சியென்றும், கோட்டையை முற்றுகையிடுதல் உழிஞை என்றும், எதிர்த்துப் பொருதல் தும்பை என்றும் வெற்றிபெறுதல் வாகை என்றுங் கூறப்பட்டன. அவ்வப்போது வீரர் அவ்வப் பூக்களைச் சூடியகாரணத்தால் அவ்வொழுக்கங்களுக்கு இப்பெயர்கள் இடப்பட்டன. புலவோர் அரசனின் புகழைப்பாடுதல் பாடாண் எனவும், உலகநிலையாமையை உணரும் பகுதி காஞ்சி எனவும் பட்டன. போர் செய்யும் நிலம், களரி, பறந்தலை, முதுநிலம், களம் எனப்பட்டது. படைகள் உண்டை, ஒட்டு, அணி, தானை எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. முன்னணிப்படை அக்கம், கொடிப்படை, தார், தூசி, நிரை என்றும், பின்னணிப்படை கூழை என்றும் வழங்கின. பிற்காலங்களில் தேர், யானை, குதிரை, காலாளெனப் படைகள் நான்காகப் பிரிக்கப்பட்டன.1 குதிரைப்படை 1. "ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்பொழுதும் ஆயத்தமாக அரசனது கட்டளைகளை எதிர்பார்த்து நாட்டைக் காத்து வந்தனர். சிற்றரசர்கள் எல்லோரும் கப்பங்கட்டி வந்ததோடு வேண்டிய பொழுது துணைப்படையு முதவக் கடமைப்பட்டிருந்தனர். தேர், யானை, குதிரை, காலாள் எனப் படை நால்வகைப்பட்டிருந்தது. யாானகள் முன்வரிசையிலும், குதிரைகள் இருபுறங்களிலும், காலாள் பின்வரிசையிலுமாகச் சண்டையில்அணிவகுக்கப்பட்டு நின்றன. அவை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஒரு மகா சாமந்தன் அதிகாரத்தின்கீழ் இருந்தன. அம்மகாசாமந்தரும் ஒரு மகா சாமந்தாதிபதியின் கட்டளைக்குட்பட்டிருந்தனர். சகல போர் விஷயங்களையும் கனவிப்பதற்குச் சந்தி விக்கிரகி என்னும் மேலான அதிகாரி ஒருவன் இருந்தான். சண்டையில் ஈட்டி, கத்தி, வேல், வில், அம்பு முதலிய பல ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டன. போர் தொடங்குமுன் வீரர், வீரபானஞ்செய்வது வழக்கம். அதனால் வீரனொருவனே ஆயிரம் பகைவரை எதிர்க்க வல்லவனாவான். யானைகளுக்கும் மதுவுண்பித்தலுண்டு. அவையும் வெறிகொண்டு மிதித்தும் துவைத்தும் எதிரிகளைச் சின்னபின்னஞ் செய்யும். போர் வீரர் மனைவியர் கணவரோடு போர்க்களத்துக்குச் செல்வது வழக்கம். சேனாபதி ஒருவன் சண்டையில் முதுகிட்டுப்போனால் அதற்குத் தண்டனையாகப் பெண்வேடந்தரிப்பித்து அவனை அவமானப் படுத்துவர்--(சளுக்கிய) விக்கிரமாதித்தன்--பக். 50--அ. வா. வெங்கட்டராம ஐயர், M.A.,L.T. |