பேணி இனிது வாழுதி" என வாழ்த்தினர். மணமகளுக்கு ஆபரணங்கள் நிறையப் பூட்டப்பட்டன. அவ்வாபரணப் பொறையைப் பொறுக்கமாட்டமையால் அவளுக்கு வியர்வை தோன்றிற்று. அழகியபெண்கள் விசிறி கொண்டு வீசினர். குற்றமில்லாத முகூர்த்தம் வந்தது. தமர் விரைவில்வந்து கிழத்தியைக் கிழவனுக்கு அளித்தார்கள். மருதநிலத்தே ஆடல் பாடல்களிற் றேர்ந்த கூத்தியர் விறலியர் முதலியோர் வாழ்ந்தனர். இவர்கள் பரத்தைமையினர். இவர்கள் நிமித்தம் மருதநிலத்தலைவன், தலைவியர்களுக்கிடையில் ஊடல், புலவி முதலிய பிணக்கங்கள் நேர்வதுண்டு. கைக்கிளை, பெருந்திணை என்னும் இருவகைக்காதல்களும் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. கைக்கிளை என்பது தம்மாற் காதலிக்கப்பட்ட மகளிர் தம்மைக் காதலியாதவிடத்து மைந்தர் தம் காதலை வெளிப் படுத்திப் பலகூறுதல். பெருந்திணையாவது ஆடவன் காதலியாதவிடத்து அவனைக் காதலிக்கும் ஒருத்தி காதல் மிகுதியால் பல மொழிந்து கரைதல். தாம் காதலித்த மகளிர் தம்மைக் காதலித்து மணக்க உடன்படாதவிடத்து மைந்தர், பனங்கருக்கினாற் செய்த மணிகட்டிய குதிரை மீது ஏறி ஆவிரம்பூ, எருக்கம்பூ, என்புமாலைகளைச்சூடிப், பெண்ணின்வடிவை ஓலையில்எழுதிக், கையிற்பிடித்து (சிறுவர் இழுக்க) வீதியில் ஊர்தலும் பெருந்திணை எனப்படும். இது நல்லது இனியது எனப் புலவர் நாட்டிய புலநெறி வழக்கென்ப. போர் தமிழ்நாட்டு மன்னர் பிற அரசரைக் கீழ்ப்படுத்தித் தம்மாணையை மேம்படுத்தற்பொருட்டுச் செருக்கள் பல மலைந்தனர். ஒவ்வோர் அரசனுக்கும் வெவ்வேறு கொடியும் மாலையும் இருந்தன. போருக்குச் |