மன்றல் அக்கால மன்றல் புரோகிதர் இன்றி நடந்தன. கணி எனப்பட்ட சோதிடர் கலியாணத்துக்கேற்ற நல்லநாளை ஆராய்ந்து கூறினர். சங்க நூல்களிற் காணப்படும் மன்றல் முறை வருமாறு: உரோகிணி சந்திரனோடு கூடும் புரணை நாளில் கலியாண முகூர்த்தம் வைக்கப்பட்டது. வீட்டின் முற்றத்தே கால்கள் நட்டு அழகிய பந்தல் இடப்பட்டது; தரையில் ஆற்றின் வெண்மணல் பரப்பப்பட்டது. அழகிய பூமாலைகளையும் இலைகளையும் தூக்கிப் பந்தல் அலங்கரிக்கப்பட்டது. பருப்பு இட்டு ஆக்கிய சோற்றுக்குவியல் பலர் கூடியிருந்து உண்டபின்னும் மிகுந்து கிடந்தது. பெரிய மேளங்களும் மணவாத்தியங்களும் ஒலித்தன. அறுகங் கிழங்கை நூலாற்சுற்றிச்செய்த தெய்வ உருவம் வாழையிலையின்மீது வைத்துப் பூவால் அலங்கரிக்கப்பட்டது. விளக்குகள் கொளுத்தப்பட்டன. கலியாணத்தைப் பார்ப்பதற்குப் பூப்போன்று அழகிய கண்களையுடைய பெண்கள் வந்து கூடினார்கள். புதிய நீர்க்குடங்களைத் தலையிலும் கையில் புதிய வாயகன்ற பாலிகைச் சட்டிகளையுமுடைய பெண்கள் வந்தார்கள். அப்பொழுது பெண்கள் ஆரவாரஞ் செய்தனர். அவர்கள் அப்பாத்திரங்களை ஒருவர் கையிலிருந்து மற்றவர்கைக்கு மாற்றினர். புதல்வரைப் பெற்றோரும் தாலிதரித்தோருமாகிய அழகிய நான்கு முதுபெண்கள் அந்நீர்க் குடங்களை வாங்கி மணமகளை முழுக்காட்டினர். மணமகளின் கரியகூந்தல் நீருடன் வந்த நெல்லாலும் மலராலும் மறைந்தது. அம் முதுபெண்டிர் "நீ கொண்டானுக்கினியளாய் அவனைப் |