காதல் முற்காலப் புலவோர் காதல், போர் என்னும் இரு துறைகளிலும் பாடல்கள் புனைந்தனர். இப்பாடல்களிற் காணப்படும் ஒழுக்கங்கள் வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டு வருவன. மகளிரும் மைந்தரும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்துக் கிழவன் கிழத்தியராதலே பண்டை நாள் மன்றல். பிறரறியாவகை சிலநாட்கரந்தொழுகும் காதலொழுக்கம் களவெனவும், பலரறிய மணந்து கிழவன் கிழத்தியராய் இல்லிருந்து நல்லறம் நடத்தும் ஒழுக்கம் கற்பெனவும்படும் கூடிய காதலர் பிரிந்தவிடத்து இரங்கல், பிரிந்தவர் வருவாரென்று அவரை எதிர்நோக்கி ஆற்றியிருத்தல், ஒருவரோடு ஒருவர் பிணங்கி ஊடுதல் என்பனபோன்ற பொருள்களைப் பலவாறு கற்பித்துப் பண்டைப் புலவோர் பாடல் புனைந்தனர். மலைநாட்டு்மகளிரும் மைந்தரும் ஆதிகாலத்திற் களவிற்கூடிப் பின் மணந்து கொண்டனராதலின் புணர்தலும் அது காரணமாயுள்ள பொருள்களும் குறிஞ்சிக்கு உரித்தாகப்பட்டன. முல்லைநிலத்தில் மணங்கள் முதியவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டன. முல்லைநிலமகளிர் காலையில் மந்தைகளுடன் சென்ற காதலர் மாலையில் மீளும் வரையும் அவரை எதிர்பார்த்திருத்தலின் முல்லைக்கு இருத்தல் உரித்தாக்கப்பட்டது. கடற்கரை மகளிர் மரக்கலங்களிற் றொலைவிடஞ் சென்ற கணவரைநினைத்து இரங்கியிருத்தலின், இரங்கல் நெய்தற்கு உரித்தாக்கப்பட்டது பொருள் தேடுதல் அரசர் ஏவலை நிறைவேற்றுதல் முதலிய ஏதுக்களை முன்னிட்டுக் காதலர் பாலைநில வழியே செல்லுதலின், பாலை பிரிதலுக்கு உரித்தாக்கப்பட்டது. இவ்வொழுக்கங்கள் எல்லாம் எல்லா நிலங்களிலும் நிகழத்தக்கன. ஆடையர் பாடினரு மறையர் நீடின் உருவந் தமக்குத் தாமாய இருபிறப் பாளர்க் கொரூஉமா தீதே. (தகடூர்யா.) |