சடையவர்மன் குலசேகர பாண்டியன் |
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1180-1217) பட்டத்துக்கு வந்தவுடனேயே தான் ஒரு பேரரசை நிலை நாட்ட வந்தவன் என்பதைக் காட்டிக் கொண்டான். அவன் கல் வெட்டுக்கள் வீரப் பரணி பாடுகின்றன. |
''வஞ்சினங் கூறும் மதகளி றிவர்ந்த, வெஞ்சின வேங்கை வில்லுடன் ஒளிப்ப'' என்று அவன் சோழ சேர மரபுகளுக்கு மேற்பட, தன் மரபை உயர்த்திக் கூறினான். அவன் வீராபிஷேகம் முதலிய விருதுகள் நடத்தினான். தன் அரண்மனைக்குப் புகழா பரணம் என்றும், மூன்று வேறு வேறான அரசிருக்கைகளுக்கு மழவராயன், கலிங்கராயன், முனையதரன் என்றும் பட்டயங்களில் பெருமைப்படப் பெயர் குறித்தான். |
இப்பட்டயங்கள் அவன் வீரப் பெருமைக்குச் சான்றுகள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் அவன் ஆட்சிக் காலமுழுவதும் சோழர் பாண்டியநாட்டைப்படையெடுக்கத் துணியவில்லை. அவன் ஆட்சி எல்லை மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுர மாவட்டங்கள் உட்பட்ட பாண்டி நாடேயானாலும், ஆட்சி வலிமையும் அரசியல் சூழ்ச்சி வலிமையும் அவனிடம் இருந்தன என்பதை இது காட்டுகிறது. |
சோழன் மூன்றாம் குலோத்துங்கன் சோழரின் தளர்ச்சியும் பாண்டியரின் வளர்ச்சியும் கண்டு புழுங்கியிருந்தான் என்பதில் ஐயமில்லை. குலசேகரனின் ஆட்சியிறுதிக் காலத்தில் கிடைத்த சிறுவெற்றிகளின் பின் அவனும் விருதுகளும் வீராபிஷேகங்களும் நடத்தித் தன்வலிமையை நிலைநாட்டத் தொடங்கினான். ஆனால் அடுத்த அரசன் காலத்திலேயே சோழப் பேரரசின் வீழ்ச்சி கண்ணுக்கு எட்டிற்று. |
மாறவர்மன் சுந்தர பாண்டியன் |
மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1217-1239) சோழப் பேரரசின் எல்லையைத் தன் எல்லையாக்க முற்பட்டான். தஞ்சையும் |