உறையூரையும் கைப்பற்றிச் சுற்றுப்புறங்களைச் சூறையாடிச் சோழபதி என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டான். சோழர் முடியை முதலில் கைக்கொண்டு, அதன்பின் அதனை நன்கொடையாகச் சோழனுக்கே கொடுத்து, அவன் மகனையே தனக்குப் பிணையமாகப் பெற்று ஆண்டான். இவற்றின் சின்னமாக அவன் 'சோணாடு கொண்டருளிய, 'சோணாடு வழங்கியருளிய', என்ற சிறப்பு அடைமொழிகளை ஏற்றான். முன் ஒரு சோழன் வீராபிஷேகம் நடத்திய அதே இடத்திலேயே அவன் இப்போது வீராபிஷேகம் நடத்தினான். |
சோணாட்டை வென்றும் பாண்டியன் அதைத் திருப்பிக் கொடுத்தது பெருந்தன்மையின் பயனாக மட்டுமன்று. தெற்கே பாண்டியரைப்போல வடக்கே ஹொய்சளர் வளர்ச்சியடைந்து வந்தனர். இரு புதிய அரசுகளும் சோழருடன் மணத்தொடர்பு கொண்டிருந்தனர். ஒருவர் வளர்ச்சியை ஒருவர் தடுக்கச் சோணாடு இருப்பது நலம் என்றே இருவரும் நினைத்தனர். ஹொய்சளரின் தலையீடு இம்முடிவை எளிதாக்கிற்று. அவர்கள் பாண்டியர் படையெடுப்பின்போது, வட சோழ நாட்டைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால் தெலுங்குச் சோடர் விரைவில் ஹொய்சளரை எதிர்த்துத் தொண்டை மண்டலத்தைத் தாம் கைப்பற்றினர். |
1238-ல் பாண்டிய ஆட்சி எல்லையில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் இணைந்திருந்தன. |
மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் (1238-1253) வலிமை குன்றிய அரசனாயிருந்ததனால், ஹொய்சள மரபினராகிய அவன் உறவினர் நாட்டில் ஆதிக்கம் செலுத்தினர். |
பாண்டியப் பேரரசின் உச்சநிலை |
சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1270) காலத்தில் பாண்டிய அரசு பேரரசாகிய அதன் உச்சப் புகழை அடைந்தது. அவன் சோழரைத் தன் கீழ்ச் சிற்றரசர் ஆக்கினான். கொங்கு |