நடைபெற்றது அவர்களுக்கு வடக்கே உள்ள கடைசி ஹொய்சள அரசர் அடிக்கடி முஸல்மான் படைகளின் தாக்குதலுக்கு ஆளானாலும் நீடித்த போராட்டம் நடத்தினர். வடக்கே உள்ள இஸ்லாமியப் பேரரசு தெற்கே பரவாமலும் தெற்கிலுள்ள இஸ்லாமிய அரசு வளர்ந்து அதனுடன் தொடர்பு கொள்ளாமலும் அது சில காலம் தடுத்தது. ஆயினும் கடைசி ஹொய்சள அரசன் மூன்றாம் பல்லாளனுக்குப்பின் அவ்வரசும் வீழ்ச்சியடைந்தது. |
ஹஸன் கங்கு பகமனி 1347 முதல் 1358 வரை அரசாண்டான். அவன் பின்னோர்கள் 15-ம் நூற்றாண்டின் இறுதிவரையில் பேரரசை ஆற்றலுடையதாக்கி ஆட்சி நடத்தினார். ஆனால் மாமூது அரசன் (1482-1518) ஆட்சியில் சிற்றரசர், பெருமக்கள் நடுவாட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தனர். அவன் ஆட்சி முடிவுக்குள் பேரரசின் பகுதிகள் பீஜப்பூர், கோல்கொண்டா, அகமது நகர், பீடார், பிரார் என்ற ஐந்து அரசுகளாகப் பிரிவுற்றன. |
பீஜப்பூர் அரசர் ஆடில் ஷாக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவ்வரசின் முதல்வன் யூசுஃப் பகமனிப் பேரரசின் கீழடங்கிய வனாகவே இருந்துகொண்டு விசய நகரத்தைத் தாக்கி வெற்றி கண்டு சூறையாடினான். அவன் மகன் இஸ்மாயில் காலத்தில் பீஜப்பூர் பாமனியின் மேலாட்சியை உதறித் தள்ளித் தனியாட்சி நிறுவிற்று. |
முகம்மது காலத்தில் (1626-1686) பீஜப்பூர் அரசில் பணியாளராயிருந்த ஷாஜி என்ற மகாராஷ்டிர வீரன் மகனான சிவாஜி, கொங்காணக்கரையில் கிளர்ச்சிக் கொடி ஏந்தி ஒரு தனியரசுக்கு அடிகோலினான். இப்போது விசயநகரத்தின் ஆற்றல் மிகத் தளர்ந்திருந்ததனால் முகம்மது தன் அரசை மைசூர் கடந்து தமிழகத்தில் தஞ்சைவரை பரப்பினான். ஆனால் அடுத்த அரசன் ஆட்சிக்குள் கொங்காணம் முழுவதும் சிவாஜி கைக்குள்ளாயிற்று. சிவாஜியின் தம்பி எகோஜி தமிழகப் பகுதியில் தஞ்சையைக் கைக்கொண்டு ஆண்டான். |