பக்கம் எண் :

31
 
செலவழிக்கப்பட்டிருப்பது காண்கிறோம். ஆனால் சிந்து வெளியின் நிலை இதற்கு
நேர்மாறானது. அதன் மிகச்சிறந்த கட்டிடங்கள் நகரப் பொது மக்களுக்கு உரியவையும்,
தொழிலாளருக்குரியவையுமேயாகும். வடிநீர் வசதி, சாக்கடை வசதி ஆகிய உடல் நல
வாய்ப்புடைய தெருக்கள், காற்றோட்டமும் உடல் நல வாய்ப்பும் மிக்க வீடுகள்,
வீடுதோறும் கிணறுகள், மலம் கழி விடுதிகள், குளிப்பறைகள், நகரங்களில்
இடத்துக்கிடம் பூம்பொழில்கள் முதலிய சிறப்புக்கள் சென்னை போன்ற இக்கால
நகர்களுக்கும் முன்மாதிரிகளாய் அமைகின்றன. சென்னையில் சில ஆண்டுகளுக்குமுன்
வீட்டுக்கு வீடு பொருத்தப்பட்ட குப்பைத் தொட்டி முறை மொகஞ்சதரோவில் 5000
ஆண்டுகட்கு முன்பே நீடித்து நடைபெற்ற ஒன்றாகும். அந்நகர்களின் உடல்நல
வாய்ப்புத் திட்டங்கள் இன்று அவற்றை அகழ்ந்தாராயும் தொழிலாளருக்குக் கூடப்
பயனளிக்கின்றனவாம்!
 
     கி.பி. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டுகளில் உரோமர்
செங்கற்களால் வீடுகளும் தெருக்களும் அமைத்தனர். உலகில் முதல்முதல்
செங்கற்களைக் கண்டு வழங்கியவர்கள் அவர்களே என்று அணிமைக்காலம் வரையில்
கருதப்பட்டு வந்தது. ஆனால் சிந்துவெளி மக்கள் உரோமர்களுக்குக் குறைந்தது 3000
ஆண்டுகளுக்கு முன்பே பலவகைப்பட்ட சுட்ட செங்கல், பச்சைச் செங்கற்களைப்
பயன்படுத்தினர்! வீடுகளின் சுவர்களுக்கு மட்டுமன்றித் தளங்களுக்கும், வடிகால்களின்
பக்கங்களுக்கும் அவர்கள் செங்கற்களை வழங்கியிருந்தனர். மிகப் பெரும்பாலான
வீடுகள் காரைவீடுகள் அல்லது வேயா மாடங்களாகவே இருந்ததால், மேல்தளங்களும்
செங்கற்களாலேயே அமைக்கப் பட்டிருந்தன.
 
     தொழிலாளர் இல்லங்கள் இரண்டு வரிசைகளாகக் கட்டப் பட்டிருந்தன. இரு
வரிசைகளுக்கிடையிலும் ஓர் இடை வழி விடப்பட்டிருந்தது. இந்த இடைவழி இரு
புறத்திலும் இரண்டு தெருக்களில் சென்று கலப்பதாயிருந்தது. ஒவ்வொரு இல்லத்திலும்