எகிப்திலோ மெசெபொட்டேமியாவிலோ, பிற்கால கிரீசிலோ, உரோமிலோ கூட மொகஞ்சதரோ நகர வாழ்க்கையிலிருந்த நகரமைப்பையோ, நகராட்சித் திட்டத்தையோ, உடல்நல வசதிகளையோ காணமுடியாது. அதன் வீடுகளுக்குச் சமமான மனைகளைப் பல்லாயிர ஆண்டுக்குப் பின் ஐரோப்பாவில் கூட வெனிஸ், வீயன்னா ஆகிய வாணிக நகரங்களில் மட்டுமே காணக்கூடும். இங்கும் மொகஞ்சதரோவின் குளிப்பறை, மலங்கழி விடுதி, வடிகால் வசதி ஆகியவற்றுக்கு ஈடுகாண்பது அரிது. | தென்னாட்டிலும் தமிழகத்திலும் சிந்துவெளி நாகரிகச் சின்னத்துடன் ஒத்த சின்னங்கள் ஏராளமாக அகப்படுகின்றன. சிந்துவெளியிலுள்ள முத்திரைகளின் மூலம் நாம் சிந்துவெளியில் எழுத்துமுறை இருந்தது என்று அறிகிறோம். இவை சித்திரங்களால் எழுதப்பட்ட எழுத்துக்களின் வழிவந்த வடிவெழுத்துக்களாயுள்ளன. மீன் வடிவம் எழுத்துக்களின் அடிப்படை வடிவாயிருக்கிறது. இவ்வெழுத்து முறையே தென்னாட்டிலுள்ள பழந்தமிழ் அல்லது வட்டெழுத்துக்கும் மற்ற எழுத்து முறைகளுக்கும் பிராமி முதலிய வடபுல எழுத்துக்களுக்கும் கருமூலம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். | சிந்து எழுத்துக்கள் இன்னும் தெளிவாக இனமறியப்படவில்லை. ஆனால் சிந்துவெளிமொழி திராவிடமொழிகளுடன் தொடர்புடையது என்றும், தமிழுக்கும் பழங்கன்னடத்துக்கும் மிகவும் அணித்தாயுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முத்திரைகளில் பல தமிழ்ச் சொற்களும் சில தமிழ்க் குறட்பாக்களும் கூடக் காணப்படுவதாக அறிஞர் திருத்தந்தை ஹீராஸ் கூறுகிறார். கார்முகில், மழை, மீனவர், குரங்கர், வேலூர் ஆகிய சொற்களும்; மூன்கண் (முக்கண்ணன்) பேரான் (பெரிய ஏறு அல்லது உயிர்) எண்ணான் (எண்குணத்தான்) என்ற சிவன் பெயர்களும், கோண்டர்களிடையே இன்னும் வழங்கும் மூனுதயது (மூன்று கம்பிளிகள் இன்றியமையாத குளிர்காலம்) என்ற சொல்லும் அவர் கண்ட தமிழ் அல்லது தமிழினச் சொற்களுட் சில. சிந்துவெளி | | |
|
|