பக்கம் எண் :

42
 
ஆனால் சிந்து கங்கை வெளியில் கூட திராவிட மொழிதான் ஆரியக் கலப்புற்று
இந்தோ-ஆரிய மொழிகளாயிற்றேயன்றி மக்கள் அங்கும் பெரும்பான்மையோர்
இனத்தால் திராவிடரே யாவர். 1901-ல் எடுக்கப்பட்ட மக்கட் கணிப்பே இதைக் காட்ட
வல்லது.
 
     தூய திராவிடர் தென்னாடு முழுவதிலும் வாழ்கின்றனர். அத்துடன்
விந்தியமலைக்கு வடக்கில் கங்கையாற்றுக்குத் தெற்கில், நிரல்கோடு கிழக்கு 76 டிகிரி
(பாகை)க்குக் கிழக்கில் பீகார் வரையிலும் திராவிடரே வாழ்கின்றனர். தவிர
தென்னாட்டிலும், அதற்கு அப்பாலும் மலைப்பகுதிகளில் எங்கும் திராவிடப்
பழங்குடியினரே வாழ்கின்றனர்.
 
     சிந்து, கூர்ச்சரம், தென்னாட்டின் வடமேற்குப் பகுதி ஆகியவற்றில் சிதிய -
திராவிட கலப்பினத்தாரும், வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகளில் மங்கோலிய
திராவிடக் கலப்பினத்தாரும் வாழ்கின்றனர்.
 
     ஆரிய திராவிடக் கலப்பினத்தார் பீகார், உத்தரபிரதேசம், கிழக்குப் பஞ்சாப்
ஆகிய இடங்களிலும், கிட்டத்தட்டத் தூய ஆரியர் (இந்திய ஆரியர்) காஷ்மீர், மேற்குப்
பஞ்சாப், இரஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகியவற்றிலும் வாழ்கின்றனர்.
 
     தென்னாடு தூய திராவிட இனமும் மொழியும் பண்பும் உடைய நாடு
என்பதையும், அதன் வடக்கிலும் அடிப்படை இனம் திராவிடமே என்பதையும்
இக்கணிப்புக் காட்டுகிறது.