மொழி இனம் |
மொழியாராய்ச்சி, இன ஆராய்ச்சி ஆகியவை சிந்து வெளி தரும் ஒளியுடன் ஒத்து இயல்கின்றன அத்துறைகளும் வருங்காலத்தில் வரலாற்றுப் பேரொளிதரவல்லன. |
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டுத் தெலுங்கு, துளு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளும் ஒரே எழுத்துமுறை உடைய ஒரு மொழியாய் இருந்தன. அதே சமயம் தெற்கே தமிழும் மலையாளமும் ஒரே எழுத்துடைய ஒரே மொழியாய் இருந்தன. இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐந்து திராவிட மொழிகளும் இரண்டு மொழிகளாகவே இருந்தன என்று அறிகிறோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுத் தென் திராவிடம் அதாவது தமிழ் - மலையாளத்துக்கும், வடதிராவிடம் அதாவது தெலுங்கு - துளு - கன்னடத்துக்கும் மிகுதி வேற்றுமை இல்லாதிருந்தது. |
தென்னாட்டின் ஐந்து மொழிகளும் இரண்டாயிரத்தைந்நூறு அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரே மொழியாயிருந்திருக்க வேண்டும். இதனை நாம் பண்டைத் திராவிட மொழி என்னலாம். இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பண்பட்ட திராவிட மொழிகளாகிய தென்னாட்டு மொழிகளும், சிந்து கங்கை வெளிகளிலுள்ள பண்படாத் திராவிட மொழிகளாகிய பிராகுவி, கோண்டு, இராசமகாலி ஆகியவையும் ஒரெ மொழியாய் இருந்திருக்க வேண்டும். இதனை நாம் வரலாற்றுக்கு முற்பட்ட திராவிடம் என்னலாம். |
சிந்துவெளி மொழி, தமிழ் அல்லது பழங்கன்னடத்தை ஒத்திருந்தது என்று அறிகிறோம். இது பண்டைத் திராவிட நிலையையோ, வரலாற்றுக்கு முற்பட்ட திராவிட நிலையையோ குறித்தது ஆகலாம். |
தென்னாட்டு மக்கள் மிகப் பெரும்பான்மையாகத் திராவிட மக்களே. அவர்கள் பேசும் மொழிகளும் திராவிட மொழிகளே. |