பக்கம் எண் :

45
 
     ஒன்று கடல் கொண்ட தமிழக மரபு. மற்றொன்று முச்சங்க மரபு.
 
     கடல் கொண்ட தமிழக மரபு வருமாறு:
 
     குமரிமுனைக்குத் தெற்கே, இன்று குமரி மாகடல் அலைபாயுமிடத்தில், ஓர்
அகன்ற நிலப்பரப்பு இருந்தது. அதில் குமரிக் கோடு, பன்மலை முதலிய மலைகளும்;
குமரி, பஃறுளி முதலிய ஆறுகளும் இருந்தன.
 
     மற்றும் பஃறுளி யாற்றுக்குத் தெற்கே தென்பாலி முகம் என்ற நாடும்; பஃறுளி
குமரி ஆறுகளுக்கிடையில் ஏழ்தெங்க நாடு, எம்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு,
ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகாரை நாடு, ஏழ்குறும்பானைநாடு ஆகிய
49 நாடுகளும், குமரியாற்றுக்கு வடக்கே பன்மலையை அடுத்துக் குமரி கொல்லம்
நாடுகளும் ஆகமொத்தம் 52 நாடுகள் இருந்தன.
 
     பஃறுளி ஆற்றின் கரையில் பாண்டியர் முதல் தலை நகரமான தென் மதுரையும்,
குமரியாற்றின் கடல் முகத்தில் இரண்டாம் தலைநகரமான அலைவாய் அல்லது
கவாடபுரமும் இருந்தன. இத்தனையும் கடல் கொண்டபின் வைகையாற்றின் கரையிலுள்ள
மதுரை கடைசித் தலைநகரமாயிற்று.
 
முச்சங்க மரபு
 
     முச்சங்க முத்தமிழ் மரபு கடல்கொண்ட தமிழக மரபுடன் இயையும் தொடர்பும்
உடையது. இறையனார் அகப்பொருள் என்ற நூலின் பழமையான உரை இதை
விளக்கமாகத் தருகிறது.
 
     பாண்டியர் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள்
நிறுவினார்கள்.
 
     தலைச்சங்கம் காய் சினவழுதி முதல் கடுங்கோன் வரை, 89 பாண்டியர்
காலங்களில் 4440 ஆண்டுகள் தென்மதுரையில்