நந்தர்கள் பெருஞ் செல்வத்தைப் பற்றிக் கடைச்சங்கப் புலவர் மாமூலனார் பாடியுள்ளார். மாமூலனார் நந்தர் காலம் அதாவது கி.மு.4-ம் நூற்றாண்டினர் என்று இதனால் கருத இடம் ஏற்படுகிறது. |
மோரிய மரபின் பேரரசனான அசோகன் கி.மு.260-ல் கலிங்கத்தின்மீது படையெடுத்தான். போரில் அவன் வெற்றி பெற்றாலும் அது பேரளவில் அழிவுப் போராயிருந்தது. கலிங்கர் பக்கர் நூறாயிரம் போர் வீரர் இறந்தனரென்றும் நூற்றைம் பதினாயிரம் வீரர் சிறைப்பட்டனர் என்றும் அறியப்படுகிறது. போரின் கடுமையும் அளவும் நோக்கி, கலிங்கம் ஒரு வலிமை வாய்ந்த அரசு மட்டுமல்ல, ஒரு பேரரசே என்று கொள்ளத்தகும். அதன் எல்லை அன்றே மைசூர் வரை பரவி யிருந்தது என்று கூறல் தவறாகாது. ஏனெனில் இதுவே நந்தர் பேரரசாட்சியின் தென் எல்லை ஆகும். மோரியர் நந்தரை வென்றபோது கலிங்கர் தனியரசாகி, நந்தர் பேரரசின் தென் பகுதியைக் கைக் கொண்டிருத்தல் வேண்டும். கலிங்கத்தை வென்ற பின் அவ்வெற்றியாலேயே அசோகன் ஆட்சி எல்லை மைசூருக்கு வந்தெட்டிற்று. பிற்காலத்தில் மைசூரில் மேல் கங்கரும் கலிங்கத்தில் கீழ்கங்கரும் ஆட்சி செய்ததை நோக்க, இரண்டு கோடிகளும் ஒரே பண்டைய கங்க மரபினரால் ஆளப்பட்டன என்று எண்ண இடமுண்டு. |
மேனாட்டு வரலாற்றாசிரியர் கூட, கலிங்கத்தை ஒரு சிறிய அரசாகக் கொண்டு, மைசூர் வரை மோரியர் எப்போது வென்றனர் என்று ஆராய்ந்து முடிவு காணாது இடர்ப்படுவர்! |
அசோகனுக்குப் பின் மோரியப் பேரரசு சிதறுண்டது. ஆந்திரரும் கலிங்கரும் தலை தூக்கினர். ஆந்திரர் கி.மு.220 முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்து பேரரசராய், கி.பி.225 வரை ஆற்றல்மிக்க வல்லரசராய் விளங்கினர். அவர்கள் தாயகம் விந்திய மலைப்பகுதியே என்று பல வரலாற்றறிஞர் கருதினர். ஆனால் புதிய கல்வெட்டுக்களால் அவர்கள் சங்ககால ஆய் அண்டிரன் |