“தூளி ...... ஆர்ப்பது துடைப்பது போன்ற’’ (கம்பரா. கும்பகர்ண. 101). 3. கைவிடுதல். 4. அறுவாக்குதல். 5. நீக்குதல். “தன்கேளிர் துன்பந்துடைத் தூன்றுந் தூண்’’ (குறள். 615). 6. கொல்லுதல். “துடைத்த காலன்றனை’’ (ஞானவா. சுக்கி. 18). 7. அழித்தல். “படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி’’ (திருவாச. 4:100). ம. துடெக்க, க. தொடெ, தெ. துடுத்சு. துடை - துடைப்பு - துடைப்பம் = விளக்குமாறு. “உரோமநீள் வால்க ளற்றனதுடைப்ப மொத்தலின்’’ (உத்தரரா. இலங்கையழி. 31). துடைகாலன் = தன் குடும்பத்திற்குக் கேடுவிளைக்கும் ஆக்கங் கெட்டவன். துடைகாலி = தன் பிறந்தகத்திற்கு அல்லது புகுந்தகத்திற்குக் கேடுவிளைக்கும் ஆக்கங் கெட்டவள். துழவு - துடவு= ஒரு முகத்தலளவு. “ஒரு துடவு நெய்யும்’’ (T. A. S. Vol. II, 86). துடவு - தடவு. தடவுதல் = 1. துழாவுதல்போற் கையால் தேய்த்தல், பூசுதல், தலைக்கு என்ணெய் தடவு. (உ. வ.). 2. வருடுதல். “தந்நெஞ்சந் தாமே தடவாரோ தானவர்கள்’’ (கம்பரா. மாயாசனக. 80). 3. தகட்டுப் பணிகாரஞ் செய்தல் (யாழ்ப்.). 4. படியால் தலைதட்டி யளத்தல். தலைதடவ மூன்றுபடி கொடுத்தாள். (உ. வ.). 5. யாழ்போன்ற நரப்புக் கருவியை இயக்குதல். 6. இருட்டிற் கைகால் முதலியவற்றால் துழாவுதல். “காலினாற் றடவிச் சென்று’’ (பெரியபு. இளையான்குடி. 18). 7. திருகுதல். 8. இருட்டில் உரிமை யல்லாதவளைப் புணர்தல். 9. தேடுதல். “பிலந்தடவி’’ (கம்பரா. நட்புக்கோ. 53). 10. தடுமாறுதல். 11. குடிகாரன்போல் தள்ளாடுதல். “களிப்பட்டா னிலையேபோற் றடவுபு’’ (கலித். 101). 12. பன்னாங் குழி விளையாட்டிற் குழியைத் தடவிக் காயெடுத்தல். 13. குருடன் எழும்ப லெழுத்தைக் கையாலறிதல். 14. பயிற்சிக் குறைவால் அல்லது பார்வைக் குறைவால் கைவைத்துப் படித்தல். 15. முட்டுப் படுதல். ம. தடவுக, தெ. தடவு. துல் - துர் - துர. துரத்தல் = 1. துளைத்தல் (நாஞ். வ.). 2. உட்செலுத்துதல். “துரப்பமை யாணி’’ (பொருந. 10). துர - துரவு = 1. பாசனத்திற்கு உதவும் பெருங்கிணறு. “துரவுகிணறு இழித்தப் பெறுவதாகவும்’’ S. I. I. Vol. II, 509). 2. மணற்கேணி. 3. துருவியாராயும் வேவு. துப்புத் துரவு. (இணை மொழி). |