க. பழி. பழி = 1. இகழ்ச்சி. “புகழிற் பழியி னென்றா” (தொல். சொல். 73). 2. அலர். “ஒன்றார் கூறும் உறுபழி நாணி” (பு. வெ. 11, பெண்பாற். 4). 3. குறை (W.). 4. குற்றம். “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்து” (பட்டினப். 216). 5. தீவினை (பாவம்). “தசமாமுகன் பூவியலும் முடிபொன்று வித்த பழிபோயற” (தேவா. 890 2). 6. தீவினைப் பயன். அவனைக் கொலைப்பழி விடாது (உ.வ.). 7. தீங்கிற்குத் தீங்கு செய்வு. 8. கொலை. வெட்டுப்பழி குத்துப்பழி (உ.வ.). 9. பகை. இருவகுப்பார்க்கும் பழிமூண்டுவிட்டது (உ.வ.). க. பழி. பழிகரப் பங்கதம் = வசையை வெளிப்படையாகக் கூறாது, குறிப்பாக அல்லது மறைத்துக் கூறும் செய்யுள். “மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும்” (தொல். செய். 125). பழிகாரன் = 1. பிறர்மேற் குறைகூறுபவன் (W.). 2. கொலைகாரன். பழி சுமத்தல் = 1. கரணியமின்றிக் குற்றவாளிப் பெயர் தாங்கல். “தேரையர் தெங்கிளநீ ருண்ணாப் பழிசுமப்பர்” (தமிழ்நா. 74). 2. தன் வினையால் அல்லது பிறர் வினையால் குற்றந் தாங்குதல். பழி சுமத்துதல் = குற்றஞ் செய்யாதவனைக் குற்றவாளி யெனல். பழிதீர்த்தல் = 1. கொலைக்குக் கொலை செய்தல். 2. தீவினையைப் போக்குதல். “இந்திரன் பழிதீர்த்த படலம்” (திருவிளை.). பழிமொழி = 1. இழித்துரை. 2. குற்றச்சாட்டு. 3. புறங்கூற்று. 4. வசையுரை. பழிவிழுதல் = 1. கொலை நேர்தல். 2. கொலைக் குற்றம் நேர்தல். பழிவாங்குதல் = கொலைக்குக் கொலை அல்லது உறுப்பறைக்கு உறுப்பறை நிகழ்த்துதல். பழி - பழிப்பு = 1. இழிப்பு. “பெறுவது பழிப்பால்” (கம்பரா. படைக் காட்சி. 50). 2. வசவு. 3. நகையாட்டு. 4. குறளை. 5. குற்றம். 6. குறை. “பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர்” (பு. வெ. சிறப்புப்.) க. பழிவு. பழி - பழிசை = இகழ்ச்சி (இலக். அக.). |