பக்கம் எண் :

52. குறுவஞ்சி

மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று.

(இ - ள்.) மண்டி எதிர்ந்த வீரத்தையுடைய மன்னர்க்குத் திறையைக் கொடுத்து நாடுடைய அரசன் குடிக்குத் தண்ணளிபண்ணிக் காத்தது எ - று.

வ - று. தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான்
வாட்டானை வெள்ளம் வரவஞ்சி-மீட்டான்
மலையா மறமன்னன் மால்வரையே போலும்
கொலையானை பாய்மாக் கொடுத்து.

(இ - ள்.) தாளிலே தாழநீண்ட பெரியகையினையும் ஒப்பில்லாதமதி யினையொத்த கொற்றக்குடையினையுமுடையான் வாளினையுடைய சேனைவெள்ளம் தங்கள் நாட்டில் வருதற்கு அஞ்சி விலக்கினான்; எதிர்க்கமாட்டாத மாற்சரியத்தினையுடைய வேந்தன் பெரியமலையினையொக்கும் கொலையானையினையும் சதிபாயும் குதிரையினையும் கொடுத்து எ - று.

கொடுத்து மீட்டானென்க.

(17)

53. இதுவுமது

கட்டூரது வகைகூறினும்
அத்துறைக் குரித்தாகும்.

(இ - ள்.) 1விட்டிருக்கும் பாசறையினது கூறுபாட்டைச் சொல்லினும் முற்பட்ட குறுவஞ்சிக்கு உரிமையுடைத்து எ - று.

வ - று. அவிழ்மலர்க் கோதைய ராட வொருபால்
இமிழ்முழவம் யாழோ டியம்பக்-கவிழ்மணிய
காய்கடா யானை யொருபாற் களித்ததிரும்
ஆய்கழலான் கட்டூ ரகத்து.

(இ - ள்.) மலர்ந்த பூவாற்சிறந்த மாலையினையுடைய மகளிர் கூத்தாட ஒரு பக்கத்திலே 2முழங்காநின்ற முழவம் யாழுடனே 3ஆரவாரிப்பப் பக்கத்திலே 4கவிழ்ந்தமணியினையுடைய சீறுகின்ற மதத்தினையுடைய யானை ஒருபால் மகிழ்ந்து முழங்கும், மேலாக நல்லோர்தெரிந்தவீரக் கழலினையுடையான் விட்டிருந்த பாசறையிடத்து எ - று.

(18)

54. ஒருதனிநிலை

பொருபடையுட் 5கற்சிறைபோன்
றெருவன்றாங்கிய நிலையுரைத்தன்று.

(இ - ள்.) போரினைச்செய்யும் சேனையிடத்து வெள்ளம் தள்ளாதபடி கல்லாற்கட்டின கரையேபோலப்பெரும்படையை 6ஒருவீரன் தடுத்த நிலையைச் சொல்லியது எ - று.


1. விட்டிருக்கும்: மதுரைக். 125-7, ந. 2. தொல். புறத். சூ.8;மதுரைக். 725-6; புறநா. 169: 4-5. (பி-ம்.) 3. 'முழங்குமத்தளம்' 4. 'இசைப்ப' 5. 'நான்ற' 6. 'ஒருவன்'