‘அம்’ என்னும் வேர்ச்சொல் அம் (பொருந்தற் கருத்து வேர்) உம்முதல் = கூடுதல், பொருந்துதல். உம் - அம். அம்முதல் = க. நெருங்குதல். அம் - அமல். அமல்தல் = நெருங்குதல். “வேயம லகலறை” (கலித். 45) அம் - அமை. அமைதல் = (1) நெருங்குதல். “வழையமை சாரல்” (மலைபடு. 181) (2) நிறைதல். “உறுப்பமைந்து” (குறள். 761) அமல் = நிறைவு. (ஞானாமிர்தம், 34) (3) போதியதாதல், உளம் நிறைதல். அமைவு = பொந்திகை (திருப்தி). (4) பொருந்துதல். “பாங்கமை பதலை” (கந்தபு. திருப்பர. 9) அமர்தல் = 1. பொருந்துதல். “தன்னம ரொள்வாள்” (பு.வெ. 4 2. ஒத்தல். அமர, ஓர் உவமவுருபு. அம் - அம்பு - அம்பர் = ஒருவகைப் பிசின். M. ambar. அமைதி = பொருந்திய தன்மை, இலக்கணம். அமல் - அமலை = சோற்றுத்திரளை. “வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை” (மலைபடு. 441) அமலை = மிகுதி. அமல் - அமள் - அமளி = மிகுதி. M. amali. அமை = கெட்டி மூங்கில். “சேரே திரட்சி” (தொல். 846) “அமையொடு வேய்கலாம் வெற்ப” (பழ. 357) |