பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

உறை = ஓரிடத்திற் பொருந்தியது, இட்டது, இடுவது.

கண்ணுறை - மேலிடுவது, மேலீடு.

கையுறை - காணிக்கை. வாயுறை = உணவு, மருந்து.

செவியுறை = காது மருந்து, அறிவுரை.

உறுதல் = ஒத்தல். உறு - உறழ். உறழ்தல் = ஒத்து மாறுபடுதல், மாறுபட்டுச் சொற்போர் நிகழ்த்துதல், சொற்புணர்ச்சியில் இயல்பும் திரிபுமாதல், பெருக்கல்.

உறழ - ஓர் உவமவுருபு.        (தொல். 1232)

உறு - உறை. உறைத்தல் = ஒத்தல்.

“இலங்குமுத் துறைக்கும் எயிறு”      (ஐங். 185)

உறுநன் = சேர்ந்தவன்.

உறுதல் = நேர்தல், உற்றது, உறுவது.

உற்றுழி, உற்றவிடத்து = துன்பம் நேர்ந்தவிடத்து.

உறு - உறுவல் = துன்பம். உறு - ஊறு = துன்பம்.

உறுகண் = துன்பம், நோய், வறுமை.

உறுதல் = பொருந்தித் தங்குதல், தங்கிக் குடியிருத்தல்.

உறு - உறை, உறையுள் = குடியிருக்கும் வீடு.

உறை = கத்தியிருக்கும் கூடு; தலையணை, மெத்தை முதலிய வற்றை மூடும் பை.

உறு - உறவி = உடலில் தங்கும் உயிர், ஆதன் (ஆன்மா)

உறுதல் = செறிதல். மிகுதல், வலிமையுறல்.

உறு = உற. உறப்பு = செறிவு.

“விறப்பும் உறப்பும் வெறிப்பும் செறிவே”    (தொல். உரி. 49)

“உறுதவ நனியென வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப”      (தொல். உரி. 3)

உறு = மிக்க. உறுவன் = மிக்கோன்.

உறு - உறுதி, உறுதலை.

ம. உறுதி, தெ. உறுதி, க. உறுபு.

உறு - உறை. உறைதல் = திரைதல், கட்டியாதல், இறுகுதல்.