உடன் - உடங்கு = கூட, ஒருங்கு. உடன்படுதல் = ஒத்திசைதல். உடன்படு - உடன்பாடு - தெ. ஒடபாட்டு. உடன்படு - உடன்படிக்கை. உடன்படு - உடம்படு - உடம்படிக்கை. ம. உடம்படி, தெ. ஒடம்படிக்க, க. ஒடபடிக்கெ. து. ஒடம்படிக்கை. உடு - ஒடு = கூட (3ஆம் வேற்றுமை யுருபு). ஒடு - ஓடு = கூட (3ஆம் வே. உ.) உடு - உடை - உடைமை - உடமை. ம. உடம, தெ. ஒடமெ, க. ஒடமெ. உடை - உடையான், உடையார். உடையவன் - ம. உடையவன், தெ. ஒடயடு. உடைமை = உடன்கொண்டிருப்பது. உடைமை = உடன்கொண்டிருக்கும் பொருள், சொத்து. உடுத்தல் = உடம்போடு அணிதல். ம. உடு, க. உடு. உடு - உடுப்பு, உடுக்கை, உடை - ம. உட, க. உடெ. உடுப்பு - ம. உடுப்பு, தெ. உடுபு, க. உடுபு. உடு - உடைபோற் கோட்டை மதிலைச் சுற்றியிருக்கும் அகழி. உடு - உடுவை = அகழி. ஒ. நோ : “நீராரும் கடலுடுத்த நிலமடந்தை” (மனோன்மணீயம், தமிழ்த் தெய்வ வணக்கம்) உடு - உடும்பு = உடன்சேரச் சுவரைப் பற்றும் ஊருயிரி. க. உடு, து. உடு, ம. உடும்பு, தெ. உடுமு. உடு - உடல் = உடனிருக்கும் கூடு. ம. உடல், து. உடல், க. ஒடல், தெ. ஒடலு. உடல் - உடர், உடலம், உடம்பு, உடக்கு. ம.உடம்பு, க.ஒடம்பி. உடல்வினை = உடலொடு (பிறவியொடு) கூடிய நிகழ்கால நுகர்ச்சிவினை (பிராரத்த கருமம்). |