பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

இயங்கு = செல்லுகை. M. iynnu.

“இயங்கிடை யறுத்த கங்குல்”         (சீவக. 1360)

இயங்கு = இயக்கு (பி.வி.)

இயக்கு = போக்கு.

“நீரியக் கென்ன நிரைசெல னெடுந்தேர்”     (மலைபடு. 571)

இயக்குதல் = 1. செலுத்துதல். “தோணி யியக்குவான்” (நாலடி. 136). 2. தொழிற்படுத்துதல். 3. பழக்குதல். 4. ஒலிப்பித்தல். “கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி” (திருமுருகு. 246).

இயக்கம் = 1. அசைவு, இயங்குகை. “நாணகத் தில்லா ரியக்கம்” (குறள். 1020). 2. கண்ணியக்கக் குறிப்பு. “கண்ணிணை யியக்கம்” (மணிமே. 25 8) 3. வழி. “எறிநீ ரடைகரை யியக்கந் தன்னில்” (சிலப். 10 90). 4. முதனடை, வாரம், கூடை, திரள் என்னும் நால்வகை இசைப்பாட்டியக்கம். 5. மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகை இசைநிலை யியக்கம். 6. மலநீர்க் கழிப்பு. “ஈரியக்க நடைவழி...... விடுதல்” (காஞ்சிப்பு. ஒழுக்க. 42).

இய் - எய். எய்தல் = அம்புவிடுதல்.

“மன்னுங் கணையாலிவ னெய்திட”      (பாரத. சம்பவ. 49)

Te. eyu, K. ey, M., Tu, ey.

எய் = 1. எய்யப்படும் அம்பு. “இவளாகத் தெய்யேறுண்டவா றெவன்” (திருவிளை. பழியஞ். 24). 2. அம்புபோற் கூரிய முள்ளுள்ள பன்றி.

Te. edu, K. ey, M.eyyan, Tu. eyi.

எய்த்தல் = அறிதல்.

“நொந்தவென் றெய்த்தடிச் சிலம்பி ரங்கும்”     (சீவக. 2683)

எய்யாமை = அறியாமை.

“எய்யா மையே அறியா மையே”         (தொல். சொல். 342)

எய் - எய்நன் - எயினன் = அம்பெய்யும் வேடன்.

“கொடுவி லெயினர் குறும்பில்”         (பெரும்பாண். 129)

எயினன் = எயின்.

“எயினிடு கடனிது”             (சிலப், 12. பாடல் 19)

எயில் = ஏவறை யுள்ள மதில்.