பக்கம் எண் :

47

இய - இயல். இயலுதல் (செ. குன்றியவி.) = 1. அசைதல். “முழவுறழ் தடக்கையி னியல வேந்தி” (திருமுருகு. 215). 2. நடத்தல். “அரிவையொடு மென்மெல வியலி” (ஐங். 175). 3. உலாவுதல். “பீலி மஞ்ஞையி னியலி” (பெரும்பாண். 331). 4. நேர்தல். “இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு” (கம்பரா. குக. 40). 5. கூடியதாதல். “இயல்வது கரவேல்” (ஆத்திசூடி). 6. செய்யப்படுதல். “சிறியவர்கட் கெற்றா வியன்றதோ நா” (நாலடி. 353). 7. பொருந்துதல். “வெயிலியல் வெஞ்சுரம்” 8. தங்குதல். “மாவியல்கின்ற வீரமகேந்திர புரத்துக்கு” (கந்தபு. ஏமகூ. 4).

(செ. குன்றாவி.) - 1. அணுகுதல். “திருந்தடி நூபுர மார்ப்ப வியலி” (கலித். 83 16). 2. ஒத்தல். “பொன்னியலுந் திருமேனி” (திருவாச. 49 6). 3. உடன்படுதல். “யாதுநீ கருதிற் றன்னதி யன்றனன்” (ஞானவா. வைராக். 42).

இயல் - 1. செலவு. “புள்ளியற் கலிமா” (தொல். பொருள். 194). 2. ஒழுக்கம் (சூடா.) 3. தன்மை. “ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅது” (புறம். 25 2). 4. தகுதி. “இயலன்றெனக் கிற்றிலை” (திருக்கோ. 240). 5. மென்மை (சூடா.) 6. ஒப்பு. “மின்னியற் சடைமாதவர்” (திருவிளை. குண்டோ. 2). 7. உழுவலன்பு. “தொல்லியல் வழா அமை” (கலித். 2). 8. இயல்பு. 9. இயற்றமிழ்.10. நூல். 11. நூற்பகுதி.

இயல் - இயற்று (பி.வி.) இயற்றுதல் = 1. நடத்துதல்.

“நெஞ்சே யியற்றுவா யெம்மொடு”     (திவ். இயற். பெரிய திருவந். 1).

2. செய்தல். “இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்” (நாலடி. 194). 3. நூல் செய்தல். 4. படைத்தல். “கெடுக வுலகியற்றி யான்” (குறள். 1062). 5. ஈட்டுதல். “ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு” (குறள். 760).

இயற்று - இயற்றி = 1. முயற்சி (பிங்.) 2. ஆற்றல். “தனக்கு இயற்றியுள்ள காலத்திலே” (ஈடு. 9 1 4).

இயல் - இயல்பு = 1. தன்மை. 2. ஒழுக்கம். 3. வரலாறு. 4. நற்குணம். 5. நேர்மை. 6. முறை.

இயல் - இயற்கை = 1. இயல்பு. 2. தன்மை 3. வழக்கம். 4. நிலைமை. 5. இலக்கணம். 6. கொள்கை.

இய - இயங்கு. இயங்குதல் = 1. அசைதல். 2. போதல் (திவா.). 3. உலாவுதல் (பிங்.).